ரூ. 175 கோடியில் சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிப்பு

பழமைவாய்ந்த சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவதுமாக இடிக்கப்பட்டு, ரூ. 175 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 79-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
"ஸ்டேடியத்தை புதுப்பிக்க பொதுக்குழு முழுவதுமாக ஆதரவு அளித்துள்ளது. என்றாலும் அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கப்படும். அதுதான் விதிமுறை. அதிகபட்சமாக ரூ. 175 கோடிவரை செலவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்' என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலாளர் கே.எஸ். விஸ்வநாதன் எமது செய்தியாளரிடம் கூறினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) செயலாளராக உள்ளார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சர்வதேச வசதிகளுடன் புதுப்பித்து சென்னைக்கு மேலும் அழகு சேர்க்க முனைந்துள்ளார்.
2011-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியின் முக்கிய ஆட்டங்களை சென்னையில் நடத்தவும் அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
பழமையான ஸ்டேடியம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஸ்டேடியம் 1916-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முன்னர் தலைவராக இருந்த எம்.ஏ.சிதம்பரத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாகக் கொண்டுள்ள இந்த ஸ்டேடியம், "சேப்பாக் ஸ்டேடியம்' என்றே பெரும்பாலானோரால் அழைக்கப்படுகிறது.
40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட ஸ்டேடியத்தில் முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டி 1934-ம் ஆண்டு நடைபெற்றது. இங்கிலாந்துடன் அப்போது இந்தியா விளையாடியது. அதுமுதல் டெஸ்ட் போட்டிகளே பெரும்பாலும் நடத்தப்பட்டு வந்தது. 1987-ம் ஆண்டு முதன்முதலாக ஒருதினப் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாடியது.
பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான சேப்பாக்கம் ஆடுகளம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் வென்றது, கபில்தேவின் அற்புதமான சதம், ஒருதின போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்தது என பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், இந்திய -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 1986-ம் ஆண்டு "டை'யில் முடிந்த டெஸ்ட் போட்டி நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

0 comments:

Post a Comment