20-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது?


ஐ.சி.சி. 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடைசியாக நடைபெற்ற ஐ.சி.சி 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் பங்கு பற்றின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இறுதி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, 20-20 உலக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

2020 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்ற போதிலும், தற்போது உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கு சர்வதேச மட்டத்தில் போதிய அனுபவம் இல்லை என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் முதன்முதலாக இங்கிலாந்து நியூஸிலாந்து அணிகளிடையே 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 89 20-20 ஓவர் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. இதில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 1 ஆவது உலகக் கிண்ண 2020 ஓவர் 27 போட்டிகளும் அடங்கும்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து தென்.ஆபிரிக்கா, நியூஸிலாந்து, மே இந்திய தீவு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 139 2020 ஓவர் போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. இதில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளே கூடுதலாக தலா 21 போட்டிகளில் பங்கு பற்றியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. நியூஸிலாந்து அணி 8 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால், 20-20 ஓவர் போட்டிகளில் கூடிய வெற்றிகளைப் பெற்ற அணியாக பாகிஸ்தான் அணியே முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் அணி மொத்தம் 17 போட்டிகளில் பங்குபற்றி 13 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருபோட்டி பற்றி முடிவில்லை.

இலங்கை, இந்திய அணிகள் தலா 11 போட்டிகளில் பங்குபற்றிய போதிலும், இதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றியும், இந்திய அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. தென்.ஆபிரிக்க அணி 18 போட்டிகளில் 11 வெற்றியும், 7 தோல்வியும், மே.இந்திய தீவு அணி 11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

எனவே சர்வதேச அளவில் 20-20 ஓவர் போட்டியில் அதிக அளவில் அனுபவம் இல்லாத நிலையிலேயே இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அனைத்து அணிகளும் பங்குபற்றுகின்றன. இதற்கு உதாரணமாக லண்டனுக்குச் சென்ற அணிகள் பங்கு பற்றிய பயிற்சிப் போட்டிகளை எடுத்துக் கொள்ளலாம். நடப்புச் சாம்பியனான இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 9 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணி, தென்.ஆபிரிக்கா அணியிடம் 59 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.

பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள், பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றுள்ள போதிலும், பங்களாதேஷ் அணியின் கடும் எதிர்ப்பை சமாளித்தே வெற்றி பெற்றனர் என்றே கூற வேண்டும்.

2 ஆவது பயிற்சிப் போட்டிகளில், இலங்கை, தென்.ஆபிரிக்காவிடமும், பாகிஸ்தான், இந்தியாவிடமும் தோல்வி அடைந்தன.

உலகக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி ஸி பிரிவில், பலம் வாந்த அவுஸ்திரேலியா, மே.இந்தியத்தீவு அணிகளைச் சந்திக்கின்றது. பயிற்சி ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் குறிப்பாக துடுப்பாட்டத்தில் விட்ட தவறுகளை திருத்தாவிட்டால், 2 ஆம் சுற்று ஆட்டத்துக்கு தெரிவாவது கேள்விக்குறிதான்.

தென்.ஆபிரிக்காவில் நடைபெற்று முடிந்த இந்திய பிறிமியர் லீக் 20-20 போட்டி வீரர்களுக்கு ஒரு பயிற்சிப் போட்டியாக அமைந்தாலும், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் எந்த அணி சாம்பியின் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


0 comments:

Post a Comment