உலகக் கோப்பையில் முதல் அதிர்ச்சி: இங்கிலாந்தை சாய்த்தது நெதர்லாந்து!


டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வலுவான இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது நெதர்லாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த "பி' பிரிவு லீக் போட்டி ரசிகர்களுக்கு கடைசிவரை விருந்து படைத்திருந்தது.

"டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி, எதிரணியை முதலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.

அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய கடைசி ஓவர் மிகவும் பரபரப்பை பெற்றிருந்தது. அந்த ஓவரில் 7 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற நிலையைப் பெற்றிருந்த நெதர்லாந்து, கடைசிப் பந்தில் 2 ரன்களைச் சேர்த்து உலகப் பார்வையைப் பெற்றது.

பரபரப்பான சூழலில் டோசாட்டே மற்றும் எட்கார் ஷிபெர்லி ஆகியோர் ஒன்றிரண்டு ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக இக்கட்டான நிலையில் டாம் டி குரூத் 30 பந்துகளில் 49 ரன்களைக் குவித்து இங்கிலாந்து அணியினரை நிலைகுலையச் செய்தார். அவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றி மூலம் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது நெதர்லாந்து. அடுத்து பாகிஸ்தானுடன் வரும் 9-ம்தேதி விளையாட உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: இங்கிலாந்து 20 ஓவர்களில் 162-5 (லூக் ரைட் 71, போபரா 46, டோசாட்டே 2-35).

நெதர்லாந்து 20 ஓவர்களில் 163-6 (டி.டி.குரூத் 49, பாரென் 30, ஆண்டர்சன் 3-23).

நம்பமுடியாத வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி நம்பமுடியாதது என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோன் ஸ்மித்ஸ் மகிழ்ச்சி பொங்க கருத்து தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் எச்சரிக்கையுடன் கடுமையாகப் போட்டியளித்தோம். உண்மையிலேயே வெற்றியை நம்பமுடியவில்லை. மிகச் சிறப்பான வெற்றியாகியுள்ளது. கடைசிக் கட்டத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தது என்றாலும் வெற்றிக்கு தகுதியானவர் நாங்கள்தான். இன்றிரவு நன்றாக தூங்குவேன் என நினைக்கிறேன். அடுத்து இறுதிப்போட்டியில் விளையாடுவதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

"வெற்றிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தவறவிட்டோம். கூடுதலாக சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். அது முடியாமல்போனது. அதே சமயம் நெதர்லாந்து வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணிக்கு எனது வாழ்த்துகள்' என இங்கிலாந்து அணியின் கேப்டன் பால் காலிங்வுட் கூறினார்.

0 comments:

Post a Comment