பகலிரவாக டெஸ்ட் ஆட்டங்கள்

டெஸ்ட் ஆட்டங்களை பகலிரவாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் லார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் ஐசிசி தலைவர் டேவிட் மோர்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டெஸ்ட் ஆட்டங்களில் நடுவரின் முடிவு குறித்து பேட்ஸ்மேன்கள் முறையிடும் முறை கடந்த பல மாதங்களாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அத்தகைய முறையை அக்டோபருக்குப் பின் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகலிரவு ஆட்டங்களில் எந்த வகையான பந்தை உபயோகப்படுத்துவது என்பது குறித்து முதல் தர ஆட்டங்களில் பரிசோதித்து நல்ல முடிவு எட்டப்பட்டால், டெஸ்ட் ஆட்டங்களை பகலிரவாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் குறைவான ஓவர்கள் பந்துவீசும் அணிக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்கு ஆக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகையான ஆட்டத்தில் (டெஸ்ட், ஒரு தின ஆட்டம்...) தொடர்ந்து 3 முறை ஓர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அந்த அணியின் கேப்டனுக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.

பேட்ஸ்மெனுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைப்பது, தகுதியில்லாத ஆடுகளங்களை அமைப்பது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நாட்டு வாரியத்துக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment