சச்சின், ரெய்னா, ஜாகிர் ஓய்வு..இந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின் "வேகப்புயல்' ஆசிஷ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றுள்ளார். காயம் காரணமாக சச்சின், சேவக், சுரேஷ் ரெய்னா, ஜாகிர் கான் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் இடம் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகள் ஜமைக்காவில் வரும் 26, 28ம் தேதி நடக்கிறது. மூன்றாவது, நான்காவது போட்டி முறையே ஜூலை 3, 5ம் தேதியில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் சக உறுப்பினர்களை "டெலிகான் பிரன்ஸ்' முறையில் தொடர்பு கொண்டு வீரர்களின் தேர்வை உறுதி செய்தார். தேர்வு கூட்டத்தில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் கிறிஸ்டன் கலந்து கொண்டனர். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய நிலையில், இம்முறை வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத் தப்பட்டது. காயம் அடைந்தவர்கள், "பார்மில்' இல்லாதவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். பின்னர் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

துணை கேப்டன் பொறுப்பில் யுவராஜ் நீடிக்கிறார். புதுமுகமாக அபிஷேக் நாயர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக சச்சின்(விரல் பகுதியில்), ஜாகிர் கான்(தோள்பட்டை), சேவக்(தோள் பட்டை), சுரேஷ் ரெய்னாவுக்கு (கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு) ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. "பார்ம்' இல்லாத இர்பான் பதான் நீக்கப்பட்டுள்ளார். முனாப் படேல், ஸ்ரீசாந்த் வாய்ப்பு பெறவில்லை.

நெஹ்ரா வாய்ப்பு:

ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய 30 வயதான ஆசிஷ் நெஹ்ரா மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து காயத்தால் அவதிப் பட்டு வந்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக செப்., 2005ல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியுள்ளார்.

தமிழகம் அமோகம்:

தமிழகம் சார்பில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். சேவக் இல்லாத நிலையில் துவக்க வீரர் வாய்ப்பு தமிழகத் தின் முரளி விஜய்க்கு கிடைத் துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் இடத்தை பத்ரிநாத் பிடித்துள் ளார். தினேஷ் கார்த்திக் இரண்டாவது "ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பராக' இடம் பெற்றுள்ளார். "டுவென்டி-20' உலக கோப்பை "சூப்பர்-8' சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக படுமந்தமாக ஆடிய ரவிந்திர ஜடேஜா மீதும் தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாயர் புதுமுகம்:

ஒரே புதுமுகமாக அபிஷேக் நாயர் இடம் பெற்றுள்ளார். 25 வயது "ஆல்-ரவுண்டரான' இவர், ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பராக விளையாடினார். இதன் அடிப்படையில் வாய்ப்பு தேடி வந்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்கள், இன்று லண்டனில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகின்றனர்.

இந்திய அணி:

தோனி(கேப்டன்), யுவராஜ் சிங்(துணை கேப்டன்), காம்பிர், ரோகித் சர்மா, ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், முரளி விஜய், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, அபிஷேக் நாயர், ஆசிஷ் நெஹ்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

0 comments:

Post a Comment