மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருதின கிரிக்கெட் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியில் யுவராஜ் சிங் அபாரமாகச் சதம் அடித்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுடன் 4 போட்டிகளைக் கொண்ட ஒருதின கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
50 ஓவர்களாக நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும், காம்பீரும் முதலில் களம் இறங்கினர். காம்பீர் அதிரடியாகத் தொடங்கி 13 ரன்கள் எடுத்திருந்தபோது டெய்லர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த ரோஹித் சர்மா, 4 ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
பின்னர் தினேஷ் கார்த்திக்கும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து மேற்கிந்தியத் தீவு வீரர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தனர்.
யுவராஜ் சிங் 102 பந்துகளில் புயல் வேகத்தில் 131 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். 67 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் பெர்னார்ட் பந்துவீச்சில் அவுட்டானார். இருவரும் ஜோடி சேர்ந்து 135 ரன்களை சேர்த்தனர். அதன்பிறகு யுவராஜ் சிங்குடன் தோனி களமிறங்கினார். இருவரும் சேர்ந்து 86 ரன்கள் சேர்த்தபோது பிராவோ பந்துவீச்சில் யுவராஜ் சிங் அவுட்டானார். அதன் பிறகு 41 ரன்கள் எடுத்த தோனி ரன் அவுட்டானார். யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் அவுட்டாகாமல் முறையே 40, 21 ரன்கள் எடுத்திருந்தனர். ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களைச் சேர்த்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிராவோ 2 விக்கெட்டுகளும், டெய்லர், பேக்கர் மற்றும் பெர்னார்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்கநிலை ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கெய்ல் 37 ரன்களும், மோர்டன் 42 ரன்களும், சர்வான் 45 ரன்களும், சந்தர்பால் 63 ரன்களும் அடித்தனர். இதனால், ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்களை மட்டுமே அந்த அணியால் பெற முடிந்தது. இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியத் தரப்பில் நெஹ்ராவும் யூசுப் பதானும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, ஹர்பஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
0 comments:
Post a Comment