20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை போராடி தோற்கடித்தது

பயிற்சி ஆட்டம்

இரண்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.இதில் பங்கேற்கும் 12 அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.நேற்று நாட்டிங்காமில் நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும்,வங்காளதேச அணியும் மோதின.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஷேன் வாட்சனும்,பிராட் ஹேடினும்,வங்காளதேச பவுலிங்கை தூள் கிளப்பினார்கள்.இவர்களின் விளாசலால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 100 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.வாட்சன் 52 ரன்களில்(23 பந்து,6 பவுண்டரி,3 சிக்சர்) கேட்ச் ஆனார்.அதே ஓவரில் ஹேடினும் 47 ரன்களுடன் (29 பந்து,4 பவுண்டரி,2 சிக்சர்)வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் (14 ரன்),சைமண்ட்ஸ்(27 ரன்),மைக்கேல் கிளார்க்(35 ரன்),மைக் ஹஸ்ஸி(18 ரன்) ஆகிய வீரர்களும் ஓரளவு அதிரடி காட்டியதால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஜுனட் சித்திக்(12 ரன்),தமிம் இக்பால்(21 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை 34 ரன்களுக்குள் இழந்தாலும்,3-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் முகமது அஷ்ரபுல்லும்,ஷகிப் அல் ஹசனும் மிரட்டலாக விளையாடினார்கள்.இவர்களது ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு லேசான அச்சத்தை ஏற்படுத்தியது.ஸ்கோர் 92 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்ததும் ரன் வேகம் குறைந்தது.

முடிவில் வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.ஷகிப்அல்ஹசன் 54 ரன்களும்(29 பந்து,6 பவுண்டரி,2 சிக்சர்),அஷ்ரபுல் 26 ரன்னும்,மக்முதுல்லா 31 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் 3 விக்கெட்டுகளும்,பிராக்கன்,பிரெட்லீ தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

0 comments:

Post a Comment