"டுவென்டி-20' உலக கோப்பை திருவிழா

ஒரே ஓவரில் யுவராஜ் 6 சிக்சர்கள் விளாசியது, ஜிம்பாப் வேயிடம் ஆஸ்திரேலியா வீழ்ந்தது, 57 பந்தில் கிறிஸ் கெய்ல் 117 ரன்கள் விளாசியது, பைனலில் கடைசி ஓவரில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது போன்ற "திரில்' விஷயங்கள் முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் அரங்கேறின. இதே போன்றதொரு பரபரப்பான தருணங்களை அடுத்த மாதம் நடக்க உள்ள 2வது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் ரசிகர்கள் அனுபவிக்க காத்திருக்கின்றனர். கடந்த முறை கோப்பை வென்ற உற்சாகத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி, இம்முறை களமிறங்குகிறது.

கடந்த 2007ல் ஐ.சி.சி., சார்பில் முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக் காவில் நடத்தப்பட்டது. இதில் சச்சின், கங்குலி, டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட போதும், தோனியின் இளம் படை சாதித்து காட்டியது. பாகிஸ்தானுடனான பைனலை எளிதில் மறக்க முடியாது. ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை மிஸ்பா தூக்கி அடிக்க, ஸ்ரீசாந்த் அப்படியே "லபக்' செய்ய, இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது.

ஐ.பி.எல்., அனுபவம்:

இந்த முறையும் தோனியின் அணி சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் நமது வீரர்கள் அபாரமாக ஆடியதே முக்கிய காரணம். இதில் யூசுப் பதான், ரோகித் சர்மா, இர்பான் பதான் அதிரடியில் மிரட்டினர். துவக்கத்தில் சேவக், காம்பிர் சோபிக்காதது பலவீனம் தான். இவர்கள் எழுச்சி கண்டால், கோப்பை கனவு எளிதில் நனவாகும். வழக்கம் போல் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல் "மிஸ்டர் கூல்' கேப்டனாக தோனி செயல்பட வேண்டும். பந்துவீச்சில் ஜாகிர் கானுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிக்கலை தரலாம். கடந்த முறை கலக்கிய ஜோகிந்தர் சர்மா, ஸ்ரீசாந்த் அணியில் இல்லாததால் இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங்கை பெரிதும் நம்பியிருக்க வேண்டும். ஐ.பி.எல்., தொடரில் நமது வீரர்களின் பீல்டில் மோசமாக இருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்வது அவசியம். கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை(60 ஓவர்) வென்றது. அதற்கு பின் நம்மவர் களால் சாதிக்க முடியவில்லை. இதனை தகர்க்கும் வகையில் தொடர்ந்து இரண்டாவது "டுவென்டி-20' உலக கோப்பையை கைப்பற்றி தோனி அணி சாதிக்க வேண்டும்.

பாக்., பரிதாபம்:

கடந்த முறை பைனலுக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி இம்முறை பெரும் குழப்பத்தில் உள்ளது. முகமது ஆசிப், சோயப் அக்தர் இல்லாமல் தவிக்கிறது. கேப்டன் யூனிஸ் கான், "அதிரடி' அப்ரிதி, சோகைல் தன்வீர் போன்றவர்கள் எழுச்சி கண்டால் மட்டுமே தேற முடியும். ஆஸ்திரேலியா அணி பட்டம் வெல்ல வியூகம் வகுத்து உள்ளது. "வேகப்புயல்' பிரட் லீ, மைக்கேல் கிளார்க், சைமண்ட்ஸ் நம்பிக்கை தருகின்றனர். இவர்கள் கைகொடுத்தால் கேப்டன் பாண்டிங்கின் "டுவென்டி-20' கோப்பை கனவு நனவாகலாம். ஐ.பி.எல்., தொடர் தங்களது மண்ணில் நடந்ததால் தென் ஆப்ரிக்க வீரர்கள் "டுவென்டி-20' நுணுக்கங்களை கற்று தேர்ந் துள்ளனர். காலிஸ், போத்தா, டிவிலியர்ஸ், டுமினி, பவுச்சர் போன்றவர்கள் ஐ.பி.எல்., நாயகர் களாக ஜொலித்தனர். இவர்களது சூப்பர் ஆட்டம் தொடர்ந்தால் எதிரணிகளுக்கு சிக்கல் தான்.

உள்ளூர் சாதகம்:

இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் பிளின்டாப் இல்லாதது பின்னடைவு. ஆனாலும் போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பதால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாம். இலங்கை அணி அதிரடி ஜெயசூர்யா, முரளிதரன், மலிங்காவை தான் சார்ந்து உள்ளது. இவர்கள் ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை. இதற்கு உலக கோப்பை தொடரில் பரிகாரம் தேட முயற்சிக்கலாம். கேப்டன் கெய்ல் அதிரடி காட்டினால் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி வாகை சூடலாம். நியூசிலாந்து, வங்கதேச அணிகளும் அதிர்ச்சி தரலாம். பெயர் அளவுக்கு அயர்லாந்து, ஸ்காட் லாந்து, நெதர்லாந்து அணிகளும் பங்கேற்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தோனியின் அணி தான் முந்துகிறது. மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி:

தோனி (கேப்டன்), சேவக், யுவராஜ், காம்பிர், ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஓஜா, இர்பான் பதான், யூசுப் பதான், ரெய்னா, இஷாந்த், ரோகித் சர்மா, ஆர்.பி. சிங்.

கெய்ல் "ஒன் மேன் ஆர்மி' :

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெய்ல் உள்ளார். கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்ரிக் காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்தார். தவிர "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சதம் கடந்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (90*) மற்றும் கெம்ப் (89*) உள்ளனர். இந்தியா சார்பில் காம்பிர் (75), யுவராஜ் (70), சேவக் (68) ஆகியோர் உள்ளனர்.

மெக்கலம் அதிரடி :

"டுவென்டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள மெக்கலம், 13 சிக்சர் விளாசியுள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் (12), வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் (10) ஆகியோர் உள்ளனர்.

உமர் குல் துல்லியம் :

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 7 போட்டியில் விளையாடிஉள்ள குல், 13 விக்கெட் வீழ்த்திஉள்ளார். இந்தியாவின் ஆர்.பி. சிங் 12 விக்கெட்டு களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இலங்கை முதலிடம் :

ஐ.சி.சி., "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.

ஹைடன் அசத்தல் :

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள இவர், 4 அரைசதம் உட்பட 265 ரன்கள் குவித்துஉள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் காம்பிர் (227), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா (218) உள்ளனர்

0 comments:

Post a Comment