வெறும் உடம்பில் "டை' அணிந்த சச்சின்


இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வாழ்வில் மிகவும் வித்தியாசமான அனுபவம். ஒரு முறை சட்டை இல்லாமல் "டை' மற்றும் "ஷூ' இல்லாமல் "சாக்ஸ்' அணிந்து உள்ளார். இந்த அரிய காட்சியை யாரும் "போட்டோ' எடுக்கவில்லையாம். கடந்த 1992ம் ஆண்டு இங்கிலாந்தின் யார்க்ஷயர் கவுன்டி அணிக்காக சச்சின் விளையாடினார். அப்போது வினோதமான அனுபவங்களை சந்தித்துள்ளார். இது குறித்து கோல்கட்டாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் கூறியது:
யார்க்ஷயர் நாட்கள் மிகவும் இனிமையானவை. அங்கு "சண்டே கிளப்பில்' உறுப்பினராக இருந்தேன். ஒரு சண்டே வித்தியாசமான உடை அணிந்து வருவது என்று முடிவு செய் தோம். இதன்படி நான் உட்பட அனைவரும் சட்டை இல்லாமல் "டை' மற்றும் "ஷூ' இல்லாமல் "சாக்ஸ்' மட்டும் அணிந்து வந்தோம். நல்லவேளை இதனை போட்டோ எடுக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை. இது தான் எனது வாழ்வின் ஜாலியான மற்றும் இக்கட்டான தருணமாக அமைந்தது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை எளிதில் மறக்க முடியாது. முதல் மூன்று நாட்கள் இந்திய அணி சரியாக விளையாடவில்லை. பின்னர் நான்காம் நாளில் நான் சதம் அடிக்க, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. இறுதியில் வெற்றி பெற்று சாதித்தோம்.கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய அனுபவமும் சிறப்பானது. இங்கு முதன்முதலில் 1990ல் சர்வதேச போட்டியில் பங்கேற்றேன். இதற்கு பின் ஒவ்வொரு முறை களமிறங்கும் போது ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு பிரம்மிப்பூட்டும். இந்திய அணியின் வெற்றிக்கு கோல்கட்டா ரசிகர்கள் பக்க
பலமாக இருந்துள்ளனர். சீனியர் வீரர்கள் பற்றிய விமர்சனங்கள் தேவையில்லாதது. இது போன்ற வீண் விமர்சனங்களை காது கொடுப்பது கேட்பது இல்லை. சீனியர் வீரர்கள் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இவர்களது சேவையை அங்கீகரிக்க வேண்டும். சாதனை ரகசியம்: கடின உழைப்பு காரணமாகவே சாதனை வீரராக உயர்ந்துள் ளேன். நானும் திசை மாறியிருக்கலாம். ஒரு கட்டத்தில் பயிற்சியை தவிர்த்து விட்டு நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்று பொழுதை கழிக்கலாம் என நினைத்தேன். ஆனால் எனது பயிற்சியாளர் கண்டிப்பானவராக இருந்தார். அவருடைய "பைக்கில்' அமர வைத்து பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். இதற்கு பின் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் கடினமாக பயிற்சி செய்தேன். எதுவும் தானாக நடந்து விடவில்லை. உண்மையாக உழைத்ததன் விளைவாகவே சாதிக்க முடிந்தது.இவ்வாறு சச்சின் கூறினார்.
கல்வி சேவைக்கு தாராளம்

மும்பை: மும்பையில் உள்ள "அப்னாலயா' சேவை மையத்தை சேர்ந்த 200 குழந்தைகளின் அனைத்து செலவுகளையும் சச்சின் ஏற்றுள்ளார். இவர்களது கல்விக்கு அளிக்கும் உதவி தொகையை இரண்டு மடங்காக உயர்த்த முடிவு செய்துள்ளார். இது குறித்து சச்சின் கூறுகையில்,"" சமூக சேவையில் எனது தந்தையை பின்பற்றுகிறேன். எங்களது வீட்டில் "பேப்பர்' போடும் சிறுவனின் கல்விக்காக உதவினார். வாட்ச்மேன், போஸ்ட்மேன் என யார் வந்தாலும் டீ கொடுத்து உபசரிப்பார்.

சேவை பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். இருதயம் இல்லாதவர்கள் தான் உதவி செய்ய மறுப்பர். "அப்னாலயா' குழந்தைகளின் கல்வி உதவியை இரு மடங்காக அதிகரிக்க உள்ளேன். பெங்களூருவை சேர்ந்த சேவை நிறுவனம் 14 ஆயிரம் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கிறது. இதற்கு ரூ. 70 ஆயிரத்து 700 உதவி தொகை அளித்துள்ளேன். கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இது மற்றவர்களுக்கும் மகழ்ச்சி தருகிறது என்பதை போகப் போக உணர்ந்து கொண்டேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஊனமுற்ற சிறுவன் வீல்சேரில் வந்தான். பின்னர் எனது "பேட்டை' பிடித்து எழுந்து நின்று சிறிது நேரம் விளையாடியது மறக்க முடியாதது,'' என்றார்.

0 comments:

Post a Comment