நூறாவது டெஸ்டில் நூறாவது சதம் எகிறுகிறது எதிர்பார்ப்பு

சிட்னி மைதானத்தில் நடக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் சச்சின், நூறாவது சதத்தை எட்டுவார் என, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ல் சிட்னியில் துவங்குகிறது.

இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட் என்ற பெருமை பெறுகிறது. இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சதத்தை எட்டுவார் என அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில், சச்சின் இதுவரை 59 அன்னிய மைதானங்களில் விளையாடியுள்ளார். இதில் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள வங்கதேசத்தின் டாகா, மிர்புரில் சிறந்த சராசரி வைத்துள்ளார்.

இருப்பினும், சிட்னி மைதானம் சச்சினுக்கு ராசியானது. இதுவரை இங்கு நான்கு டெஸ்டில் பங்கேற்றுள்ளார். 1992ல் முதல் போட்டியில் சதம் (148*) அடித்தார். பின் 2000த்தில் 45, 4 ஏமாற்றினார். 2004ல் நடந்த டெஸ்டில் இரட்டை சதம் (241*, 60*) அடித்து அசத்தினார்.

கடைசியாக 2008ல் மீண்டும் சதம் (154*, 12) என, இதுவரை ஒரு இரட்டை சதம், 2 சதங்கள் அடித்து மிரட்டியுள்ளார். இம்மைதானத்தில் சச்சினின் சராசரி 221 ரன்கள் என்பது திகைப்படைய வைக்கும் தகவல்.

இது குறித்து சச்சின் கூறியது:

அன்னிய மண்ணில் நான் விளையாடிய மைதானங்களில் சிட்னி எனக்கு பிடித்தது. இங்குள்ள நேர்த்தியான சூழ்நிலை அற்புதமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை இம்மைதானத்துக்கு சிறப்பான இடம் உண்டு. ஏனெனில், இங்கு ரசித்து விளையாடுவேன். இம்மைதானத்தில் களமிறங்கும் போதே, சிறப்பாக விளையாடுவோம் என்ற எண்ணம் தோன்றிவிடும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

கடந்த 9 மாதங்களாக சச்சினிடம், பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் 100வது சதம், இவருக்கு பிடித்தமான சிட்னியில் பிடிபடட்டும்.


விற்பனை அதிகரிக்கும்:

இதனிடையே சிட்னி டெஸ்டின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகளில் 14,600 வரை விற்றுள்ளதாம். அடுத்த மூன்று நாட்களுக்கு முறையே 8,500, 7,000, 1,600 டிக்கெட்டுகளை வரை இதுவரை விற்றுள்ளது. இங்கு சச்சின் சாதிக்கும் பட்சத்தில், முழு அளவு டிக்கெட்டுகளும் காலியாகும் என நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment