மவுனத்தை கலைத்தார் கும்ளே - ராஜினாமா பின்னணி

பி.சி.சி.ஐ., மற்றும் கும்ளே இடையிலான மோதல் முற்றுகிறது. தனது தொலைநோக்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தான், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கும்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் "சுழல்' ஜாம்பவான் கும்ளே. ஓய்வுக்கு பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார்.

போதிய நேரம் இல்லாததால், இப்பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) ஏற்றுக் கொண்டது.


ஆதரவு இல்லை:

இந்தச் சூழலில் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கும்ளே போட்டு உடைத்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,""தேசிய கிரிக்கெட் அகாடமியை இன்னும் சிறப்பான மையமாக மாற்ற 3 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்தேன்.

இத்திட்டம் ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில், 10 முறை விளக்கி கூறினேன். ஆனால், கமிட்டியின் உறுப்பினர்கள் யாரும் ஏற்க தயாராக இல்லை. எனது பேச்சுக்கு மதிப்பு அளிக்காத நிலையில், வெறும் தலைவராக இருந்து பயன் இல்லை என நினைத்தேன்.

எனவே, ராஜினாமா செய்வதை தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை,''என்றார்.


செலவு அதிகம்:

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""வீரர்களை காயத்தில் இருந்து மீட்பது தொடர்பாக, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டத்தை கும்ளே சமர்ப்பித்தார். இதற்கு செலவு அதிகம். தவிர, ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் நிறுவனம் தான் இதனை கையாள வேண்டும் என நிர்ப்பந்தித்தார். இந்நிறுவனத்திடம் இருந்து அவர் கமிஷன் பெற வாய்ப்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் தான் அவரது திட்டத்தை ஏற்க முடியவில்லை,''என்றார்.


கவாஸ்கர் ஆவேசம்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியில் இருந்த கபில் தேவ் நீக்கப்பட்டார். அடுத்து வந்த ரவி சாஸ்திரி விலகினார். தற்போது கும்ளேவும் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,""சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் கும்ளே. பல முறை காயம் அடைந்த அனுபவம் அவருக்கு உண்டு.

அவர் அளிக்கும் திட்டம் வீரர்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். இத்திட்டம் குறித்து குறைந்தபட்சம் விவாதித்து இருக்க வேண்டும். நிராகரித்தது சரியல்ல. ஐ.பி.எல்., பணிகளுக்காக எனக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ. 4 கோடி இன்னும் அளிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது,''என்றார்.

0 comments:

Post a Comment