பகலிரவு டெஸ்ட் போட்டி - டிராவிட் விருப்பம்

டெஸ்ட் போட்டியை காப்பாற்ற வேண்டும். இதற்காக பகலிரவு டெஸ்ட் அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது பற்றி ஐ.சி.சி., பரிசீலிக்க வேண்டும்,'' என, இந்திய வீரர் டிராவிட் கேட்டுக் கொண்டார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள டிராவிட், வரலாற்று சிறப்பு வாய்ந்த பிராட்மேன் நினைவு உரையாற்றினார். இதன் மூலம், இந்த உரை நிகழ்த்தும் முதலாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார். மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய டிராவிட், டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து டிராவிட் பேசியதாவது:

டெஸ்ட் போட்டி என்பது தங்கத்தை போன்று தரம்வாய்ந்தது. இதனை விளையாடவே கிரிக்கெட் வீரர்கள் விரும்புகின்றனர். ரசிகர்கள் வேண்டுமானால் "டுவென்டி-20' அதிரடியை காண விரும்பலாம்.

டெஸ்ட் போட்டியை காண அதிகமான ரசிகர்களை மைதானத்துக்கு வரவழைக்க வேண்டும். இதற்காக பகலிரவு டெஸ்ட் அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தலாம். கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த முதல் தர பகலிரவு போட்டியில் பங்கேற்றேன்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒளிவெள்ளத்தில் டெஸ்ட் போட்டியை தாராளமாக நடத்தலாம். இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) ஆய்வு செய்ய வேண்டும்.


ஒருநாள் போட்டி குறைப்பு:

தற்போது அதிகமான ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்து சென்று ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடியது. பதிலுக்கு இங்கிலாந்து அணி, இந்தியா வந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற போது, ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை.

இதனால் மைதானங்கள் வெறிச்சோடி கிடந்தன. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா இடையிலான ஒருநாள் தொடரின் போது மைதானங்கள் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது.

எனவே, உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கிய தொடர்கள் தவிர, தேவையில்லாமல் நடத்தப்படும் ஒருநாள் போட்டிகளை குறைப்பது மிகவும் அவசியம்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment