முதல் டெஸ்டில் சச்சின் 100வது சதம்

ஆஸ்திரேலிய மண்ணில், சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை பதிவு செய்வார். இந்த சாதனையை முதல் டெஸ்டில் படைக்க வாழ்த்துகிறேன், என, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது.

இத்தொடரில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், இதுவரை 99 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் 48) அடித்துள்ளார்.

இதுகுறித்து வார்ன் கூறியதாவது:

இந்திய வீரர் சச்சின், தனது 100வது சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதனை, மெல்போர்னில் நடக்கவுள்ள முதல் டெஸ்டில் நிகழ்த்த வாழ்த்துகிறேன். சுமார் 70 முதல் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில், இவர் சாதனை நிகழ்த்தும் பட்சத்தில், அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


பலமான பேட்டிங்:

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. குறிப்பாக அனுபவ வீரர் ராகுல் டிராவிட், அதிக ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில், இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர்கள் அருமையாக பேட் செய்தனர்.


"பவுலிங் பலவீனம்:

இத்தொடரில், இந்திய அணியின் வெற்றிக்கு பவுலர்களின் உடற்தகுதி முக்கிய பங்குவகிக்கும். அனுபவ வீரர் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

ஒருவேளை இவர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும். இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால், பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.


உடற்தகுதி முக்கியம்:

சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி கண்ட மோசமான தோல்விக்கு, முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. எனவே இம்முறை இந்திய வீரர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் உடற்தகுதியில் சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது.

இவ்வாறு ஷேன் வார்ன் கூறினார்.

0 comments:

Post a Comment