கும்ளே திடீர் ராஜினாமா

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ளே. தற்காலிக தலைவராக பாண்டோவ் நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் "சுழல்' ஜாம்பவான் கும்ளே. ஓய்வுக்கு பின், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.

இப்படி பல பொறுப்புகளில் இருப்பதால், போதிய நேரம் இல்லாததால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதனை இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) செயற்குழு நேற்று ஏற்றுக் கொண்டது. தற்காலிக தலைவராக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலர் பாண்டோவ் நியமிக்கப்பட்டார்.


உண்மை என்ன?

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுடன் ஒத்துப் போகாததால் தான் பதவியை கும்ளே ராஜினாமா செய்ததாக தெரிகிறது. ஒரு காலத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி என்பது இளம் வீரர்களை உருவாக்கும் களமாக இருந்தது.

தற்போது காயமடைந்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக மாறியுள்ளது. இதற்கு கும்ளே எதிர்ப்பு தெரிவிக்க, பிரச்னை வெடித்துள்ளது. தவிர, "டென்விக்' என்ற விளையாட்டு நிறுவனத்தை கும்ளே நடத்தி வருகிறார்.

இதில், கர்நாடகாவின் வினய் குமார், ஸ்ரீநாத் அரவிந்த் உள்ளிட்ட இளம் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தனது செல்வாக்கை பயன்படுத்தி இவர்களை, இந்திய அணியில் இடம் பெறச் செய்ததாக கும்ளே மீது புகார் கூறப்பட்டது.

இப்படி தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

0 comments:

Post a Comment