எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்

ர்வதேச விளையாட்டில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பானதாகவே அமைந்தது. கிரிக்கெட்டில், உலக கோப்பை(50 ஓவர்) வென்றது. ஹாக்கியில், ஆசிய சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

கால்பந்தில், தெற்காசிய சாம்பியனாக மகுடம் சூடியது. இதை தவிர, டென்னிஸ், பாட்மின்டன், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா அல்லது ஏமாற்றமே மிஞ்சியதா என பார்ப்போம்...


தீபிகா பல்லிகல்:

ஸ்குவாஷ் போட்டியை பொறுத்தவரையில், சென்னை வீராங்கனையான தீபிகா பல்லிகல், 20, அசத்தினார். இந்த ஆண்டு மட்டும் ஆரஞ்ச் கவுன்டி ஓபன், கலிபோர்னியா ஓபன், ஹாங்காங் தொடர் என, மூன்று சர்வதேச பட்டங்களை வென்றார். தவிர, உலக ஸ்குவாஷ் ஓபன் தொடரின் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் தீபிகா பல்லிகல், 2011 பிப்ரவரியில் தரவரிசை பட்டியலில் முதன் முறையாக 24வது இடத்திற்கு முன்னேறிய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். சமீபத்தில் 17வது இடத்தில் இருந்த இவர், இப்போது 19வது இடத்திலுள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் ஜோஷ்னா சின்னப்பா (34வது ரேங்க்), இந்த ஆண்டு ஒரு பட்டம் (சிகாகோ) மட்டும் வென்றார். ஆண்கள் பிரிவை பொறுத்தவரையில் சவுரவ் கோஷல், சித்தார்த், ஹரிந்தர் பால் ஆகியோர் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க வெற்றி எதுவும் பெறவில்லை.


தீபிகா குமாரி:

வில்வித்தை போட்டி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெற்றிகரமானதாக இருந்தது. 2012ல் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள நிலையில், சர்வதேச அளவில் இந்திய பெண்கள் அணி அசத்தலான திறமை வெளிப்படுத்தியது, லண்டன் பதக்க கனவை அதிகப்படுத்தி உள்ளது.

இதில் முன்னணியில் இருப்பவர் தீபிகா குமாரி, 17. சாதாரண ஆட்டோ ரிக்ஷா தொழிலாளியின் மகளான இவருடன் இணைந்த பம்பயலா தேவி, சுவுரோ ஜோடி, உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில், கொரியாவை வீழ்த்தினர்.

தவிர, இத்தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி என்ற பெருமை பெற்றனர். பைனலில் ஏமாற்றிய இவர்கள், வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தனர்.


ஆண்கள் சொதப்பல்:

ஆண்கள் பிரிவில் ஜெயந்த் தாலுக்தர் மட்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அணி அளவில் எடுத்துக்கொண்டால் பெரும் ஏமாற்றமே. ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தருண்தீப் ராய், காமன்வெல்த்தில் வெண்கலம் வென்ற ராகுல் பானர்ஜி ஆகியோருக்கும் ஏமாற்றமே.

மொத்தத்தில் இந்த ஆண்டு இந்திய அணி பல்வேறு சர்வதேச போட்டிகளில் 13 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என, மொத்தம் 40 பதக்கங்களை வென்றது. இதில் 12 பதக்கங்கள் தீபிகா குமாரியால் மட்டும் கிடைத்தது.


ஜுவாலா ஆறுதல்:

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் இரட்டையரில் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது தான், இந்த ஆண்டின் பெரிய வெற்றி. மற்றபடி இந்தியாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செய்னா நேவல், சுவிஸ் கிராண்ட் பிரிக்சில் மட்டும் தங்கம் வென்றார். மலேசியா, இந்தோனேஷிய தொடர்களில் பைனலில் வீழ்ந்த இவர், உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின், பெண்கள் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய, முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். கலப்பு இரட்டையரில் ஜுவாலா, திஜு ஜோடி, ஒற்றையரில் காஷ்யப்பிற்கு ஏமாற்றம் தான் தந்தனர்.

ஆனால், புதியவரவான சிந்து,16, டச்சு ஓபன், மாலத்தீவு, இந்தோனேஷியா, சுவிஸ் தொடர்களில் கோப்பை வென்றார். 151வது ரேங்கில் இருந்த இவர், தற்போது 42வது இடத்துக்கு முன்னேறினார்.

0 comments:

Post a Comment