தோல்விக்கு என்ன காரணம்?

மூன்றாவது ஒருநாள் போட்டியில் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, கேப்டன் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதுகுறித்து இந்திய கேப்டன் சேவக் கூறியதாவது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இதற்கு "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் முக்கிய காரணம். குறிப்பாக நானும், காம்பிரும் அடுத்தடுத்த பந்தில் "டக்-அவுட்' ஆனது பின்னடைவாக அமைந்தது.

அதன்பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்களிடமும் சரியான "பார்ட்னர்ஷிப்' அமையாதது வெற்றியை தட்டிப்பறித்தது. தவிர, கடந்த இரண்டு போட்டியிலும் "டாப்-ஆர்டர்' பெரிய அளவில் சோபிக்கவில்லை. மீதமுள்ள இரண்டு போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறந்த துவக்கம் அளிக்க முயற்சிக்க வேண்டும்.

சுரேஷ் ரெய்னா ஏமாற்றி வருவது பின்னடைவான விஷயம். ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் நல்ல "பார்மில்' இருப்பதால், "மிடில்-ஆர்டரில்' ஓரளவு ரன் சேர்க்க முடிகிறது. இக்கட்டான நேரத்தில் ரோகித்துடன் இணைந்து அஷ்வின் கைகொடுத்தது பாராட்டுக்குரியது.

ரோகித் சர்மா, சதம் அடிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. இவரது பொறுப்பான ஆட்டம் மீதமுள்ள போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன்.

இக்கட்டான நேரத்தில் "டெயிலெண்டர்கள்' சாதிப்பது எளிதான காரியமல்ல. அபிமன்யு மிதுன், உமேஷ் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிரடியாக இரண்டு சிக்சர் விளாசிய மிதுன், அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானதால், தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மிதுன், உமேஷ், வினய் என இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை அளித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கியது எதிரணிக்கு சாதகமாக அமைந்தது. வரும் போட்டிகளில் கட்டுக்கோப்பாக பந்துவீசும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.

இவ்வாறு சேவக் கூறினார்.

0 comments:

Post a Comment