நம்பியது நடந்தது - தோனி

சச்சினின் 200 ரன்கள் சாதனையை சேவக் மட்டுமே முறியடிக்க முடியும் என, எப்போதும் நம்பினேன் இது சரியாக நடந்துள்ளது,'' என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் நடந்த நான்காவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்து இரட்டை சதம் அடித்த சேவக், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (219) எடுத்தவர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

இந்திய அணியின் கேப்டன் தோனி, சேவக் சாதனை குறித்து கூறியது:

குவாலியர் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்து சாதித்தார். இதையடுத்து எல்லோரும் பல்வேறு வீரர்களை குறிப்பிட்டு, அவர்களால் சச்சின் சாதனையை தகர்க்க முடியும் என்று கூறிவந்தனர்.

ஆனால் நான் மட்டும் சேவக்கினால் தான், இரட்டைசதம் அடிக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன்.

இவர் பெரிய அளவில் அதிரடியான ஆட்டக்காரர் என்பதால் மட்டும் இப்படி நினைக்கவில்லை. சாதனை நிகழ்த்தும் பேட்டிங் திறமை சேவக்கிடம் இருந்தது என்பது தான் உண்மை.

மொத்தத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட இரண்டு இரட்டை சதங்களையும், இந்திய வீரர்கள் தான் அடித்துள்ளனர் என்று நினைக்கும் போது, மிகவும் பெருமையாக உள்ளது.

இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று வருவதற்கு காரணம் கடின உழைப்பு தான். வேறு எந்த குறுக்கு வழியையும் நாங்கள் பின்பற்றுவது கிடையாது.

இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமன்றி, மற்ற விளையாட்டுகளையும் வளர்க்க வேண்டும். இதற்கான என்னென்ன வழிமுறைகள் உள்ளதோ, அவை அனைத்துக்கும் நான் உதவத் தயாராக உள்ளேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment