மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சர்வதேச சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்தார். இவர், 73 ரன்கள் எடுத்து, பீட்டர் சிடில் வேகத்தில் "கிளீன் போல்டானார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. பிராட் ஹாடின் (21), பீட்டர் சிடில் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.


ஜாகிர் அபாரம்:

முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் சிடில் (41), பிராட் ஹாடின் (27) ஜோடி ஜாகிர் கான் வேகத்தில் வெளியேறியது. அடுத்து வந்த ஹில்பெனாஸ் (19), நாதன் லியான் (6), அஷ்வின் சுழலில் சிக்கினர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. பட்டின்சன் (18) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜாகிர் கான் 4, உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.


சேவக் அரைசதம்:

பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு காம்பிர் (3) ஏமாற்றினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய சேவக், டெஸ்ட் அரங்கில் தனது 30வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது, பட்டின்சன் வேகத்தில் சேவக் (67) போல்டானார்.


சூப்பர் ஜோடி:

பின் இணைந்த டிராவிட், சச்சின் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட் (63வது), சச்சின் (64வது) அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த போது, பீட்டர் சிடில் வேகத்தில் சச்சின் (73) "கிளீன் போல்டானார். இதன்மூலம் சச்சினின், "சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை தகர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து, 119 ரன்கள் பின்தங்கி இருந்தது. டிராவிட் (68), இஷாந்த் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ், பட்டின்சன், பீட்டர் சிடில் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

1 comments:

  1. சச்சின் விரைவில் சதம் அடிப்பார்,

    இன்று என்னுடைய வலைப்பூவில்
    வன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012

    ReplyDelete