முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின், ஹர்பஜன், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் (ஆக.,10-28) இலங்கையில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் அனுபவ வீரர்களான சச்சின், ஹர்பஜன் மற்றும் முழங்கால் பகுதியில் காயமடைந்த காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் யுவராஜ்: மோசமான "பார்ம்' காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ், மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஜாகிர், ஸ்ரீசாந்த் இடம் பெறவில்லை. நெஹ்ரா, இஷாந்த், பிரவீண் குமார், அபிமன்யு மிதுன் ஆகிய "வேகங்கள்' திறமை காட்ட உள்ளனர். 15 பேர் அடங்கிய அணியில், ஒரே "ஆல்-ரவுண்டராக' ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். தமிழகம் வாய்ப்பு: காம்பிர் இல்லாத நிலையில் துவக்க வீரராக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் களமிறங்க இருக்கிறார். மற்றொரு தமிழக சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் சாதிக்க காத்திருக்கிறார். இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் இடம் பெற்றிருந்த அஷ்வின், சவுரப் திவாரி தற்போது முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அசோக் டிண்டா, மனிஷ் பாண்டே, ஆஸ்திரேலியா செல்லும் அணியில் இடம் பெறுவர்,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வருமாறு: தோனி(கேப்டன்), சேவக்(துணை கேப்டன்), விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, யுவராஜ், ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சவுரப் திவாரி.
0 comments:
Post a Comment