யுவராஜ் சிங்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ஐ.பி.எல்., தொடர் மூலம் கிடைத்த வருமானத்துக்கு, வரி செலுத்தாமல் உள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு, சண்டிகர் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ம் ஆண்டு துவங்கியது. இதுவரை 3 தொடர்கள் நடந்துள்ளன. இத்தொடர் மூலம் கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றனர்.

ஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் விளையாடினார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இவருடன் இணைந்து வி.ஆர்.வி.சிங், சன்னி சோஹல், உதய் கவுல் ஆகியோர் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் முதல் மற்றும் 2 வது ஐ.பி.எல்., தொடர் மூலம் பெற்ற வருமானத்துக்கு, வரி கட்டாமல் உள்ளனர். இதனால் வருமான வரித்துறை இவர்கள் நான்கு பேருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஒரு கோடி ரூபாய் வரி:

இது குறித்து சண்டிகர் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடர் மூலம் கிடைத்த வருமானம் குறித்து யுரவாஜ் உள்ளிட்ட 4 பேரும் எந்தத் தகவலும் இதுவரை அளிக்க வில்லை. முதல் இரண்டு ஐ.பி.எல்., தொடர் மூலம் யுவராஜ் சிங் பெற்ற வருமானம் 4. 25 கோடி ரூபாய் என வருமான வரித்துறை கணக்கீடு செய்துள்ளது.

வி.ஆர்.வி.சிங், சன்னி சஹோல் மற்றும் உதய் கவுல் ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை வரி கட்டவில்லை. யுவராஜ் 1.17 கோடி ரூபாயும், வி.ஆர்.வி.சிங் 11.33 லட்சம் ரூபாயும், சன்னி சோஹல் மற்றும் உதய் கவுல் ஆகியோர் 4.53 லட்சம் ரூபாயும் வருமான வரி கட்ட வேண்டும். அவர்கள் 4 பேருக்கும் இந்த மாத இறுதிக்குள் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment