பதிலடி கொடுக்குமா இந்தியா ?

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இலங்கை அணி வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இன்று துவங்குகிறது.

பலமான பேட்டிங்:

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட தவறினர். இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் சதமடித்து ஆறுதல் அளித்த சேவக் மற்றும் அரைசதமடித்த சச்சின், யுவராஜ், லட்சுமண் உள்ளிட்டோர் தங்களது அபார ஆட்டத்தை தொடர வேண்டும். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் டிராவிட், தோனி உள்ளிட்டோர் பொறுப்புடன் ஆடினால் வலுவான இலக்கை எட்டலாம்.

பலவீனமான பவுலிங்:

ஜாகிர், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன் ஆகியோர் விரைவில் விக்கெட் வீழ்த்த வேண்டும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள், கடந்த போட்டியில் திணறினர். இவர்கள் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போட்டியில் அமித் சர்மா, முனாப் படேல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கினால் நல்லது.

சொந்தமண் சாதகம்:

பொதுவாக இலங்கை அணியினர், சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனை காலே டெஸ்டில் காண முடிந்தது. இப்போட்டியில் சதமடித்த பரணவிதனா, கேப்டன் சங்ககரா உள்ளிட்டோர் மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு தில்ஷன், மகிலா ஜெயவர்தனா, சமரவீரா, மாத்யூஸ் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம்.

வருகிறார் மெண்டிஸ்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சுழல் ஜாம்பவான் முரளிதரன் ஓய்வு பெற்றதால், இவரது இடத்துக்கு மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2008ல் இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்டில் 26 விக்கெட் வீழ்த்தி, தொடரை கைப்பற்ற காரணமாக விளங்கினார்.

இதேபோல காயம் காரணமாக மலிங்காவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், பெர்ணான்டோ களமிறங்குகிறார். கடந்த டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய இவர்கள் இல்லாதது, இலங்கை அணிக்கு பின்னடைவான விஷயம்.

இரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால், கடந்த போட்டியை போல இந்த டெஸ்ட் போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

0 comments:

Post a Comment