ஓய்வு பெறுகிறார் முரளிதரன்

டெஸ்ட் போட்டிக்கு "குட்பை' சொல்கிறார் முரளிதரன். இந்தியாவுக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டிக்கு பின், முறைப்படி ஓய்வு பெறுகிறார்.


இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். கடந்த 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.1995ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்டில் இவர் பந்தை எறிவதாக சர்ச்சை எழுந்தது. அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்துவீசுவதாக கூறிய அம்பயர் டேரல் ஹேர் 7 முறை "நோ-பால்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.


இதிலிருந்து மீண்ட முரளிதரன் சாதனை வீரராக ஜொலித்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதுவரை 132 டெஸ்டில் 792 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 11 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.


ஓய்வு முடிவு:

ஐ.பி.எல்., "சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியில் இடம் பெற்றுள்ள இவர், சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து ஓய்வு பெற முடிவு செய்தார். ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன், இலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் கேப்டன் சங்ககராவை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக பங்கேற்கும்படி தேர்வுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த முரளிதரன், வரும் 18ல் துவங்கும் இந்தியாவுடனான காலே டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""மிகச் சிறந்த "ஆப்-ஸ்பின்னரான' முரளிதரன், காலே டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். அதிபர் ராஜபக்சேவின் ஆசியுடன் விடைபெறுகிறார்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக கோப்பை: டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை(50) தொடரில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளார் முரளிதரன். இது பற்றி இவரது மானேஜர் குஷில் குணசேகரா கூறுகையில்,""இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அவசரமாக அறிவிக்கப்பட்டதால், ஓய்வு பெற முடிவு செய்தார்.


இவருக்கு மாற்றாக, சிறந்த வீரர்கள் யாரும் கிடைக்காத பட்சத்தில் 2011, உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என தேர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்,''என்றார்.


18 ஆண்டுகள்: கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் முரளிதரன், டெஸ்டில் ஆயிரம் விக்கெட் வீழ்த்த வேண்டும் என எண்ணி இருந்தார். இதற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. டெஸ்ட் மட்டும் அல்ல அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது.


இது குறித்து சமீபத்தில் இவர் கூறுகையில்,""தற்போது 38 வயதாகி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் முன்பு போல் பந்துவீச முடிவதில்லை. 15 முதல் 16 ஓவர்கள் வீசினால் மிகுந்த களைப்படைந்து விடுகிறேன். ஒரு நாள் போட்டிகளில் 10 ஓவர் வீசினால் போதும் என்பதால், பிரச்னை இல்லை. இதிலும் சிரமம் ஏற்பட்டால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவேன்,''என்றார்.


மும்மூர்த்திகள்: டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் கும்ளே(619 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன்(708 விக்.,) மற்றும் முரளிதரன் ஆகியோர் "சுழல்' ஜாலம் காட்டினர். கும்ளே, வார்ன் ஓய்வு பெற்று விட்ட நிலையில், இவர்களுக்கு நிகரான வீரர்களை இன்று வரை கண்டறிய முடியவில்லை. தற்போது முரளிதரனும் ஓய்வு பெற உள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்படும்.

0 comments:

Post a Comment