இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், சச்சின், டிராவிட், தோனி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரும் ஏமாற்றம் அளித்தனர். யுவராஜ் சதம், காம்பிர் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தனர்.


இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் சுழலில் மிரட்டிய மெண்டிஸ், 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 18ம் தேதி காலேயில் நடக்கிறது. இதற்கு முன் இந்தியா, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.


முதலில் பேட் செய்த இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு உபுல் தரங்கா (110), கண்டம்பி (111), சமரவீரா (102) சதமடித்து கைகொடுக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 432 ரன்கள் எடுத்திருந்தது.


வலுவான இலக்கு: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணியின் சாண்டிமல் (47*) ஓரளவு கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 514 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இந்தியா சார்பில் பிரக்யான் ஓஜா 5, அமித் மிஸ்ரா 2, இஷாந்த், மிதுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


திணறல் துவக்கம்: பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக் (18), டிராவிட் (11), சச்சின் (4), லட்சுமண் (6) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் திணறல் துவக்கம் கொடுத்தனர். பின்னர் இணைந்த துவக்க வீரர் காம்பிர், யுவராஜ் சிங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தபோது காம்பிர் (89) அவுட்டானார்.


யுவராஜ் ஆறுதல்: அடுத்து வந்த கேப்டன் தோனி (10), அமித் மிஸ்ரா (1) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் அபாரமாக ஆடிய யுவராஜ் சதமடித்து ஆறுதல் அளித்தார். இவர் 118 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி 291 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. துல்லியமாக பந்துவீசிய அஜந்தா மெண்டிஸ் 6, வெலகேதரா, செனனாயகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

0 comments:

Post a Comment