ஒரே மைதானத்தில் அதிக சதம் அடித்து, ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை தகர்த்துள்ளார் ஜெயவர்தனா. கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் ஜெயவர்தனா, சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இவர் அடிக்கும் 28 வது சதமாக அமைந்தது. தவிர, கொழும்பு, சின்கிளைஸ் ஸ்போர்டஸ் கிளப் மைதானத்தில், இவர் அடிக்கும் 10 வது சதம் இது. இதன் மூலம் ஒரே மைதானத்தில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஜெயவர்தனா. இதற்கு முன், முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், மெல்போர்ன் மைதானத்தில் 9 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதை ஜெயவர்தனா முறியடித்துள்ளார். இது குறித்து ஜெயவர்தனா கூறியது: எனது சொந்த ஊரில் உள்ள இம்மைதானத்தில் அதிக சதம் கடந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இங்கு 23 போட்டிகளில் விளையாடிய 10 சதம் கடந்துள்ளேன். ஆனால் டான் பிராட்மேன், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 11 போட்டிகள் மட்டுமே விளையாடி 9 சதம் அடித்துள்ளார். அவரது சாதனை பாராட்டத்தக்கது. என்னை அவருடன் ஒப்பிடுவது பற்றி நான் சிந்திக்க வில்லை. அவர் உலகின் தலை சிறந்த வீரர். அந்தக் காலக் கட்டத்தில் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது அவருக்கு நிகராக நாம் ஒன்றும் செய்து விட வில்லை. விக்கெட் வீழத்துவோம்: கொழும்பு டெஸ்டில் அதிக ரன் குவிக்க சங்ககராவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தாலும், இலங்கை பவுலர்கள் இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவார்கள். தற்போது ஆட்டம் முழுவதும் எங்கள் கையில் தான் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்று கடும் நெருக்கடி கொடுப்போம். இவ்வாறு ஜெயவர்தனா கூறினார்.
0 comments:
Post a Comment