உலக கோப்பையில் 145 கோல்கள்

உலக கோப்பை கால்பந்து அரங்கில் கோல் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 171 கோல்கள் அடிக்கப்பட்டன.


அதன் பின் கடந்த 2002ல் ஜப்பான்-தென் கொரியா இணைந்து நடத்திய உலக கோப்பை தொடரில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன.


இம்முறை தென் ஆப்ரிக்காவில் நடந்த 19வது உலக கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 145 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. இருப்பினும் "உவுசெலா' மூலம் எழுப்பப்பட்ட ஒலி, ரசிகர்களின் வித்தியாசமான "மேக்கப்', "ஆக்டோபஸ்' ஆருடம் என சுவாரஸ்யமான பல நிகழ்வுகளால், இத்தொடரின் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருந்தது ஆறுதலான விஷயம்.


இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் இணைந்து 64 போட்டியில் 145 கோல் அடித்துள்ளன. இதில் 59 கோல் ஆட்டத்தின் முதல் பாதியிலும், 84 கோல்கள் 2வது பாதியிலும், 2 கோல்கள் கூடுதல் நேரத்திலும் அடிக்கப்பட்டன.


* இந்த 145 கோல்கள், 98 வீரர்களால் அடிக்கப்பட்டன. இதில் டேவிட் வில்லா (ஸ்பெயின்), ஸ்னைடர் (நெதர்லாந்து), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), போர்லான் (உருகுவே) அதிகபட்சமாக தலா 5 கோல்கள் அடித்துள்ளனர். குளோஸ் (ஜெர்மனி), ஹிகுவேன் (அர்ஜென்டினா), ராபர்ட் விட்டெக் (சுலோவேகியா) தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.


* இம்முறை இரண்டு "சேம் சைடு கோல்' அடிக்கப்பட்டன. டென்மார்க் வீரர் ஆக்கெர் (எதிர்-நெதர்லாந்து), தென் கொரியாவின் சு யங் பார்க் (எதிர்-அர்ஜென்டினா) ஆகியோர் "சேம் சைடு கோல்' அடித்தனர்.


* ஏழு போட்டியில் விளையாடிய ஜெர்மனி அணி, மொத்தம் 16 கோல் அடித்துள்ளது. இதன்மூலம் இம்முறை அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதனை தொடர்ந்து நெதர்லாந்து (12 கோல்), உருகுவே (11 கோல்), அர்ஜென்டினா (10 கோல்), பிரேசில் (9 கோல்), ஸ்பெயின் (8 கோல்), போர்ச்சுகல் (7 கோல்), தென் கொரியா (6 கோல்) அணிகள் உள்ளன. அல்ஜீரியா மற்றும் ஹோன்டுராஸ் அணிகள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.


* ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் போர்ச்சுகல் அணி முதலிடம் பிடித்தது. வடகொரியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி அதிகபட்சமாக 7 கோல் அடித்தது.


* இம்முறை தொடரின் முதல் கோலை தென் ஆப்ரிக்க வீரர் லாரன்ஸ் டிஷபலாலா (எதிர்-மெக்சிகோ) அடித்தார். 25வது கோல் சுவிட்சர்லாந்தின் ஜெல்சன் பெர்னாண்டஸ், ஸ்பெயின் அணிக்கு எதிராக அடித்தார். பராகுவே வீரர் டோரஸ், சுலோவேகியா அணிக்கு எதிராக தொடரின் 50வது கோல் அடித்தார். தென் கொரியாவின் லீ ஜங் சூ, நைஜீரியா அணிக்கு எதிராக தொடரின் 75வது கோல் அடித்தார். தொடரின் 100வது கோலை ஸ்பெயின் வீரர் இனியஸ்டா, சிலி அணிக்கு எதிராக அடித்தார். இவரே நெதர்லாந்து அணிக்கு எதிரான பைனலில் தொடரின் 145வது கோல் அடித்து ஸ்பெயின் அணி முதன்முறையாக உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.


* இம்முறை 17 போட்டிகள், 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தன. 11 போட்டிகள் 2-1 எனவும், 7 போட்டிகள் 1-1 எனவும், 6 போட்டிகள் 2-0 எனவும், தலா 3 போட்டிகள் 3-0, 3-1, 3-2 எனவும், தலா 2 போட்டிகள் 2-2, 4-0, 4-1 எனவும், ஒரே ஒரு போட்டி 7-0 எனவும், 7 போட்டிகள் 0-0 எனவும் முடிந்தன.


* கால்பந்து அரங்கில் எதிரணி வீரர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் வீரர்களுக்கு மஞ்சள் மற்றும் சிகப்பு நிற கார்டு வழங்குவது வழக்கம். இம்முறை 17 வீரர்களுக்கு "ரெட் கார்டு' அல்லது சிகப்பு நிற அட்டை வழங்கப்பட்டது. 247 வீரர்களுக்கு "எல்லோ கார்டு' அல்லது மஞ்சள் நிற அட்டை கொடுக்கப்பட்டது. இது கடந்த உலக கோப்பை தொடரை ஒப்பிடும் பொழுது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 28 "ரெட் கார்டு', 307 "எல்லோ கார்டு' வழங்கப்பட்டது.


* இதில் வடகொரியா-ஜவரி கோஸ்ட், ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டியில் ஒரு "ரெட்' மற்றும் "எல்லோ' கார்டு கூட வழங்கப்படவில்லை. இத்தொடரில் அதிகபட்சமாக ஸ்பெயின்-நெதர்லாந்து அணிகள் மோதிய பைனலில் ஒரு "ரெட்' கார்டு, 14 "எல்லோ கார்டு' வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment