இந்தியா "நம்பர்-1' அணியா?

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வரும் இந்தியா, "நம்பர் -1' அணி போல தோன்றவில்லை,'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.


சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி (124 புள்ளிகள்). இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் படுதோல்வி அடைந்தது.


இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறியது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஆனால் பவுலிங், பலவீனமாக உள்ளது. காயம் காரணமாக ஜாகிர் கான் இல்லாதது, பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தொடரில் தடுமாறி வரும் இந்திய அணி, "நம்பர்-1' அணி போல தோன்றவில்லை.

சவாலான தொடர்:ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோத உள்ள ஒரு நாள் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். இருப்பினும் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இல்லை. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதமாக அமையும். ஹர்பஜன் சிங், பார்ம் இன்றி தவித்து வருகிறார்.


ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் பலர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். இதனால் 1995 ம் ஆண்டு முதல் 2005 வரை வீழ்த்த முடியாத அணியாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 1970 ம் ஆண்டு முதல் 1980 வரை கிரிக்கெட் அரங்கில் அசத்திய வெஸ்ட் இண்டீசுக்கும், இதே நிலைமை ஏற்பட்டது. மற்ற அணிகளுக்கும் அப்படித்தான். இருப்பினும் ஆஸ்திரேலியா, எழுச்சி பெறும்.


வெற்றிடம்: முரளிதரன் ஓய்வு, கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பு. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், இந்தியாவின் அனில் கும்ளே ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து சுமார் 2000 விக்கெட்டுகள் வரை கைப்பற்றியுள்ளனர்.


இனி இவர்களது இடம் வெற்றிடமாக உள்ளது. இருப்பினும் இளம் வீரர்கள் சாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சுவான், இந்தியாவின் ஹர்பஜன், இலங்கையின் மெண்டிஸ் ஆகியோர், எதிர்காலத்தில் சுழற் பந்து வீச்சில் அசத்தலாம். இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment