டெஸ்ட் அரங்கிலிருந்து விடை பெற்றார் முரளிதரன்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளார் முரளிதரன். கடந்த 18 ஆண்டுகளாக தனது சுழல் மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்த இவர், பல்வேறு சர்ச்சைகளை கடந்து சாதித்துக் காட்டியுள்ளார்.


இவரது சாதனையை இனி யாரும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் வார்ன் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன். 8 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர், முதலில் வேகப்பந்துவீச்சளாராக தான் இருந்தார். பின் 14வது வயதில் சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். 1992ல் தனது 20வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாக இருந்தது.


"தூஸ்ரா' பிரச்னை: கடந்த 1995ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்டில், முரளிதரன், பந்தை எறிவதாக சர்ச்சை எழுந்தது. அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்துவீசுவதாக கூறிய அம்பயர் டேரல் ஹேர் 7 முறை "நோ-பால்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதிலிருந்து மீண்ட முரளிதரனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.


இவரது "தூஸ்ரா' முறையிலான பந்துவீச்சு குறித்து இந்தியாவின் பிஷன் சிங் பேடி உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர். விதிமுறைக்கு புறம்பாக வீசப்படும் "தூஸ்ரா' வகை பந்துவீச்சை தடை செய்ய வேண்டுமென பேடி வலியுறுத்தினார்.


ஆனாலும். ஐ.சி.சி., பச்சைக் கொடி காட்டியதால் தனது பிரம்மாஸ்திரமான "தூஸ்ரா' மூலம் விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.


ஓய்வு முடிவு: கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய முரளிதரன், சமீப காலமாக முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான காலே போட்டியுடன், டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.

இப்போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி தந்த இவர், டெஸ்டில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். உடல்நிலை காரணமாக டெஸ்டில் ஆயிரம் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இலக்கை இவரால் எட்ட முடியவில்லை.

ஒரு நாள் போட்டிகளில் தொடர முடிவு செய்துள்ள இவர், வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை(50) தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர், ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் கும்ளே(619 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன்(708 விக்.,) மற்றும் முரளிதரன் ஆகியோர் "சுழல்' ஜாலம் காட்டினர். இவர்கள் மூவரும் விடைபெற்றுள்ளதால், டெஸ்ட் அரங்கில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment