கால்பந்து சூறாவளி

கால்பந்து குறித்து சிறிது அறிந்திருப்பவர்கள் கூட ரொனால்டோவைப் பற்றி நிச்சயமாக அதிகம் அறிந்திருப்பார்கள். அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர் பிரேசில் வீரர் ரொனால்டோ.

ரொனால்டோ லூயில் நசாரியோ டே லிமா என்பது அவரது முழுப்பெயர். 1976-ல் பிறந்த அவர், சிறுவயதில் கூடைப் பந்தாட்டத்தில் தொடங்கி பின்னர் கால்பந்தில் ஜொலிக்கத் தொடங்கினார். பந்தை நுணுக்கமாகவும், வேகமாகவும் எடுத்துச் சென்று கோல் அடிக்கும் திறமை அவருக்கு மட்டுமே உரியது. அவரது ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானத்துக்கு வருவது வழக்கம்.

1996, 1997, 2002 ஆகிய ஆண்டுகளில் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிபா விருதை ரொனால்டோ வென்றுள்ளார்.

முன்னதாக 1993-ல் க்ரூசெயிரோ கிளப்புக்காக தொழில்முறையாக விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து ரியல் மாண்ட்ரிட், மிலன் உள்பட பல்வேறு புகழ்பெற்ற கிளப்புகளில் அவர் விளையாடினார்.

1994-ல் பிரேசில் அணியில் இடம் பிடித்து ஆர்ஜென்டீனா அணிக்கு எதிராக நட்பு ரீதியான போட்டியில் விளையாடினார். அப்போது ரொனால்டோவின் ஆட்டம் அவ்வளவாக எடுபடவில்லை.

எனினும் அடுத்து வந்த ஒவ்வொரு ஆட்டங்களிலும் அவரது வேகமும், அவர் அடிக்கும் கோல்களும் அதிகரித்து வந்தது. 1998 உலகக் கோப்பையில் நான்கு கோல்கள் அடித்ததுடன், 3 கோல்களை அடிக்க உதவியும் செய்திருந்தார். இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம், பிரேசில் தோல்வியடைந்தது. போட்டிக்கு முந்தைய நாள் இரவு ரொனால்டோ வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

ஆனால் இதனை ஈடுசெய்யும் விதமாக 2002-ம் ஆண்டு உலக் கோப்பையை ரொனால்டோ தலைமையிலான பிரேசில் அணி வென்றது. அந்தப் போட்டியில் அவர் மொத்தம் 8 கோல்களை அடித்து தங்கக் காலணியை வென்றார்.

2006-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது ரொனால்டோ அதிக எடை கூடி விட்டார். அவரால் சிறப்பாக விளையாட முடியாது என்று கருத்து எழுந்தது.

ஆனால் அந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் புதிய சாதனை படைத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 15 கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். உலகக் கோப்பையில் போட்டித் தொடரில் தொடர்ந்து 3 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அவர் தனதாக்கினார்.

எனினும் காலிறுதியில் பிரான்ஸிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்று பிரேசில் வெளியேறியது. பின்னர் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டதால் அவர் தேசிய அணியில் இடம் பிடிக்கவில்லை. தற்போது கொரிந்தியின்ஸ் கிளப் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

0 comments:

Post a Comment