மறக்க முடியாத தருணம்

தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலககோப்பை கால்பந்து தொடரில், தனது மின்னல் வேக ஆட்டத்தால் உருகுவே அணிக்கு பலம் சேர்த்தார் டீகோ போர்லான்.


இத்தொடரில் 5 கோல்கள் அடித்த இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வழங்கப்படும் "கோல்டன் பால்' விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் தென் அமெரிக்க நாடுகள் சார்பில் இவ்விருதை கைப்பற்றும் 4 வது வீரர் என்ற பெருமை பெற்றார்.


இவருக்கு முன் அர்ஜென்டினாவின் மாரடோனா (1986), பிரேசிலின் ரொமாரியோ (1994) மற்றும் ரொனால்டோ (1998) ஆகியோர் இவ்விருது வென்றுள்ளனர். உயரிய விருது வென்ற மகிழ்ச்சியில் போர்லான் அளித்த பேட்டி:


* "கோல்டன் பால்' விருது வென்றது குறித்து உங்கள் கருத்து?

மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் எனது பெயர் இருந்தது. இருப்பினும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஆனால் பியுனஸ் ஏர்சில் இருந்த எனது நண்பர் எனக்கு போனில் வாழ்த்துதெரிவித்தார். அதற்குப் பின் தான் "கோல்டன் பால்' விருது வென்றதை அறிந்து கொண்டேன்.


* இவ்விருதை வெல்வோம் என எதிர்பார்த்தீர்களா?

"கோல்டன் ஷூ' விருது வெல்ல வேண்டும் என்பது தான் எனது கனவாக இருந்தது. அதை நோக்கி தான் சென்று கொண்டிருந்தேன். ஆனால் நான் நினைத்தபடி நடக்க வில்லை. மாறாக, சிறந்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருது கிடைத்துள்ளது. எதுவாக இருந்தாலும், எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை கருதுகிறேன்.


* உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

சிறு வயது முதலே கால்பந்து வீரராக வேண்டும் என்பது தான் எனது ஆசை. எனது பெற்றோர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் தந்த உற்சாகத்தால் கடின முயற்சியுடன் செயல்பட்டேன். இதனால் சாதிக்க முடிந்தது. இனி வரும் தொடர்களில் எனது திறமையை மேம்படுத்த முயற்சிப்பேன்.


* தாய்நாட்டில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

எனக்கு கிடைத்த பெருமை எல்லாம், உருகுவே மக்களுக்கு தான் சேரும். நாடு திரும்பியவுடன், ஏராளமானோர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களது பாராட்டுக்களை, எனது வாழ்வின் மிகச் சிறந்த விருதாக கருதுகிறேன்.


* பைனலுக்கு முன்னேறாதது வருத்தம் அளித்ததா?

பாராட்டுகள், விருது என ஒரு புறம் மகிழ்ச்சி இருந்தாலும், அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளித்தது. அதை மறப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.


* சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி குறித்து உங்கள் கருத்து?

உலககோப்பையில் முதல் முறையாக கோப்பை வென்று சாதித்துள்ளது ஸ்பெயின் அணி. அதற்கான முழுத் தகுதியும் ஸ்பெயின் அணியிடம் இருந்தது. தனது முதல் லீக் போட்டியில் சுவிட்சர்லாந்திடம் தோல்வி அடைந்த ஸ்பெயின் அணி, கோப்பை வெல்லும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் மிக விரைவில் வெற்றிப் பாதையை எட்டிப் பிடித்து விட்டது ஸ்பெயின். அந்த அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


* பிரேசிலில் வரும் 2014 ம் ஆண்டு நடக்கும் உலககோப்பை தொடரில் பங்கேற்பீர்களா?

அடுத்த உலககோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தற்போது எனக்கு 31 வயதாகிறது. வரும் 2014 ல் எனக்கு 35 வயதாகி விடும். இதனால் உறுதியாக எதையும் சொல்ல முடியாது. உடலும், மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் கட்டாயம் பங்கேற்பேன்.

0 comments:

Post a Comment