எனது சாதனையை ஹர்பஜன் எட்டுவார்: முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது சாதனையை, ஹர்பஜனால் மட்டுமே எட்ட முடியும்,''என, முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வரும் 18ல் துவங்கும் இந்தியாவுடனான போட்டியுடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். "சுழல்' மன்னனான இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 132 டெஸ்டில் 792 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து முரளிதரன் கூறியதாவது:

டெஸ்ட் போட்டியில் எனது சாதனைகளை எட்டக் கூடிய ஒரே பவுலராக இந்தியாவின் ஹர்பஜனை குறிப்பிடலாம். இவர் எவ்வளவு காலம் கிரிக்கெட் அரங்கில் விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது. இவர் நீண்ட நாட்கள் விளையாடும் பட்சத்தில், இச்சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 85 டெஸ்டில் 355 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், அதிக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பட்சத்தில் விரைவில் சாதிக்கலாம்.

சாதனை முக்கியமல்ல:

சாதனைக்காக என்னால் நீண்ட நாட்கள் விளையாட முடியாது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், 800 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த மகிழ்ச்சியோடு ஓய்வு பெறுவேன்.

சிக்கலில் டெஸ்ட்:

"டுவென்டி-20' போட்டிகளில் வரவால் டெஸ்ட் போட்டிகள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன என்றுதான் கூற வேண்டும். இதேபோல ஒருநாள் போட்டிகளின் மதிப்பு குறைந்து விட்டது. தற்போது "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே பிரபலமடைந்துள்ளது.

சச்சின் சிறந்தவர்:

கிரிக்கெட் அரங்கில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா இருவரையும் சிறந்த வீரர்களாக கருதுகிறேன். இவர்களுக்கு எதிராக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கடைசி டெஸ்டில் சச்சினுக்கு எதிராக பந்துவீச இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.

பலிக்காத கனவு:

கிரிக்கெட் அரங்கில் நிறைய சாதனைகள் படைத்த எனக்கு, ஒரு சில கனவுகள் நிறைவேறாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதாவது இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடர் கூட கைப்பற்ற முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு குறித்து எவ்வித எண்ணமும் இல்லை. ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விரும்பும் வரை விளையாட திட்டமிட்டுள்ளேன். ஓய்வுக்கு பின், அரசியல் அல்லது பயிற்சியாளராக செயல்பட விருப்பம் இல்லை. எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு முரளிதரன் கூறினார்.

0 comments:

Post a Comment