உலக கோப்பை வெல்லுமா இந்திய அணி?

இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும், பவுலிங் பலவீனமாக உள்ளது. இதில், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உலக கோப்பையை மீண்டும் வெல்வது கடினம்,'' என, அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார்.
இந்தியாவில் 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், அர்ஜூனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி கோப்பை வென்றது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரணதுங்கா, இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து கூறியது:

நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் ரோகித் சர்மா சிறப்பானவர். இவரது ஆட்டத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். இவர் ஏன் இவ்வளவு காலம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார் என வியந்ததுண்டு. அதேபோல, விராத் கோஹ்லி, இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் என, இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. 

சொந்த மண்ணில் வெற்றி பெறுவதை விட, வெளிநாட்டில் வெல்வது தான் முக்கியமானது. இதற்கு பவுலிங்கும் கைகொடுக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது. இதில் முன்னேற்றம் அடையாவிட்டால், 2015 <உலக கோப்பை தொடரில், சாதிப்பது மிகவும் கடினம். 


பேட்டிங் சாதகம்:

 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள் நல்லது தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு. ஏனெனில், ஓவருக்கு 8 முதல் 10 ரன்கள் கொடுக்கும் நிலையில், பவுலர்கள் பவுலிங்கை விட்டு விட்டு, பேட்டிங்கை தேர்வு செய்து விடுவர். 

தவிர, கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கானது என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் இது 60:40 என்ற சதவீதத்தில் இருக்க வேண்டும். இப்போதுள்ள புதிய விதிகளால் 90:10 என்று ஆகிவிட்டது. 

பெரும்பாலான ஆடுகளங்களும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்படுவதால், இவர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. இதனால், பவுலிங் தரமும் குறைந்து வருகிறது. 

பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா தவிர, மற்ற அணிகளின் பவுலிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதேநேரம், நாங்கள் விளையாடிய போது இருந்ததை விட, இப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் பவுலிங் சுமார் தான். 


சரியில்லாத விதி:

ஒரு நாள் போட்டியில் இரு புதிய பந்துகள் பயன்படுத்துவதும் சரியல்ல. ஏனெனில், துணைக்கண்டத்தில் விளையாடும்போது, பந்து சேதப்பட வாய்ப்பில்லை. தவிர, பீல்டிங்ல் மாற்றங்களால், பேட்ஸ்மேன்கள் எளிதாக 200 ரன்களை எடுத்து விட வாய்ப்புள்ளது. 


பல் இல்லா புலி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தான், உலக கிரிக்கெட்டினை கட்டுப்படுத்த வேண்டும். மற்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டினை இதற்கு அனுமதிக்கக் கூடாது. 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது மாறிவிட்டது. ஐ.சி.சி., பல் இல்லாத புலி ஆகி விட்டது. யாராவது சிறு நபர் இதனிடம் கிடைத்தால், தண்டனை கொடுத்து விடுகிறது. பெரிய நபர் என்றால், இரண்டு அடி பின்னால் சென்றுவிடுகிறது. 

0 comments:

Post a Comment