தவான் அசத்தல் சதம் - தொடரை வென்றது இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தவான் அதிரடியாக சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று, சமநிலையில் உள்ளது. 

மூன்றாவது போட்டி கான்பூரில் நடந்தது. இதில் "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாவெல், சார்லஸ் ஜோடி துவக்கம் தந்தது. சார்லஸ் (11) புவனேஷ்வர் வேகத்தில் போல்டானார். பின் பாவெலுடன் இணைந்த சாமுவேல்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த பாவெல் (70) ஒருநாள் அரங்கில் தனது 5வது அரைசதத்தை பதிவு செய்து அவுட்டானார். 

எதிர்முனையில் இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த சாமுவேல்ஸ் (71) அஷ்வின் "சுழலில்' சரணடைந்தார். சிம்மன்ஸ் (13) நிலைக்கவில்லை. கேப்டன் டுவைன் பிராவோ (4) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் சமி, டேரன் பிராவோ அதிரடியாக ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்தது. சமி (37), டேரன் பிராவோ (51) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட் கைப்பற்றினார்.


தவான் அபாரம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித், தவான் ஜோடி துவக்கம் அளித்தது. ரோகித் (4) ராம்பால் வேகத்தில் வெளியேறினார். பின் வந்த விராத் கோஹ்லி (19) சொதப்பலாக அவுட்டானார். 

பின் தவானுடன் இணைந்த யுவராஜ் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான், ஒருநாள் அரங்கில் 5வது சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு நல்ல "கம்பெனி' கொடுத்த யுவராஜ் சிங், அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தவான் 119 ரன்களில் வெளியேறினார். ரெய்னாவும் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (23) ஜடேஜா (2) அவுட்டகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment