சரியான நேரத்தில் ஓய்வு - சச்சின் உருக்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெற்றேன்,'' என, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தெரிவித்தார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான சாதனை படைத்த இவர், தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். நேற்று மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சச்சின் அளித்த பேட்டி: 

மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாததது, எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது என்ய கனவு பயணம். கிரிக்கெட்டை விட்டு விலகுவதில் வருத்தம் இல்லை. மிகச் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளேன்.


கிரிக்கெட் "ஆக்சிஜன்': 

கிரிக்கெட் எனது வாழ்க்கை. நான் சுவாசிக்கும் ஆக்சிஜன். கடந்த 40 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்காக செலவழித்துள்ளேன். அதாவது, என் வாழ்வின் 75 சதவீதம் கிரிக்கெட் தான் விளையாடி உள்ளேன். 

எனவே உடனடியாக எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன் என்பதை கணிக்க முடியாது. ஓய்வு பெற்று 24 மணி நேரம் தான் ஆகிறது. குறைந்தபட்சம் 24 நாட்கள் என்னை "ரிலாக்ஸாக' இருக்க விடுங்கள். 


ஆடுகளம் "கோயில்': 

மைதானத்தில் உள்ள ஆடுகளம் (பிட்ச்) கோயிலுக்கு சமம். ஏனெனில் என்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியது இந்த ஆடுகளம் தான். இது, என் வாழ்வில் தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுத்தது. 

தேவைகளை பூர்த்தி செய்ய உதவிய ஆடுகளத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக தான், கடைசி நாள் "பிட்சை' வணங்கிவிட்டு வெளியேறினேன். இதுபோன்ற ஒரு சிறந்த தருணம் என் வாழ்வில் என்றும் கிடைக்காது.


உடலுக்கு ஓய்வு: 

தற்போதும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். கிரிக்கெட் வாழ்க்கையில், நிறைய காயங்களை சந்தித்த எனது உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்தேன்.


சிறந்த தருணங்கள்: 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய அணி உலக கோப்பை வென்றது. இந்திய அணிக்காக உலக கோப்பை வென்று தர வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, 22 ஆண்டுகளுக்கு பின் தான் நிறைவேறியது. இதனை என் வாழ்வின் சிறந்த தருணமாக கருதுகிறேன். இதேபோல, கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின், ரசிகர்கள் கொடுத்த பிரியாவிடை என்றும் மறக்க முடியாதது. 

0 comments:

Post a Comment