வாழ்த்து மழையில் பாரத ரத்னா சச்சின்

நாட்டின் மிக உயர்ந்த "பாரத ரத்னா' விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தவர். 

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் பங்கேற்ற தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட் உலகில் இருந்து விடை பெற்றார் சச்சின். 

இவருக்கு "பாரத ரத்னா' விருது தரவேண்டும் என, கோரிக்கை கடந்த 2011ல் எழுந்தது. கடந்த 1954 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, விளையாட்டு தவிர, கலை, இலக்கியம், அரசியல் மற்றும் பொதுத் துறைகளில் சாதித்தவர்களுக்கு மட்டும் தரப்படும். 

விதிகளில் மாற்றம்: ஆனால், சச்சினுக்காக விளையாட்டு வீரர்களும், இவ்விருதை பெறும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் என, அப்போதைய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தார். இதனால், "பாரத ரத்னா' விருது பெறுபவர்களுடைய தகுதியில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு, கடந்த 2011, டிசம்பர் மாதம் முன்வந்தது. 

சச்சினுக்கு முன்: இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்ற ஹாக்கி வீரர், மறைந்த தியான்சந்த்துக்கு முதலில் பாரத ரத்னா விருது தர வேண்டும் என, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக 82 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது.

பலத்த போட்டி: ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் (2008, பீஜிங்) வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு முதலில் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். 

இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் "பாரத ரத்னா' விருது கேட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு மொத்தம் 64 விண்ணப்பங்கள் வந்தன. இதனால், 2011, 2012ல் இவ்விருது யாருக்கும் தரப்படவில்லை. 

இதனிடையே, கடந்த ஜூலையில் மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திரா சிங், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,"சச்சினுக்கு முன், ஹாக்கி வீரர் தியான்சந்த்துக்கு, "பாரத ரத்னா' தரவேண்டும்,' என, தெரிவித்தார். 

இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான் உள்ளிட்ட பலர், சச்சினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்தில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" சச்சின் ஓய்வு பெற்றவுடன், "பாரத ரத்னா' விருது வழங்கப்படும்,'' என்றார். சச்சின் பெயரை நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்தார்.

நேற்று சச்சின் விடைபெற்ற சிறிது நேரத்தில், "பாரத ரத்னா' விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, விளையாட்டு உலகில் இருந்து இவ்விருது பெறும் முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுகிறார். பேராசிரியர் சி.என்.ஆர். ராவிற்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட உள்ளது.

0 comments:

Post a Comment