கோல்கட்டாவில் சச்சின் திருவிழா

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்காக கோல்கட்டாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன்(நவ. 14-18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

இதற்கு முன்னதாக கோல்கட்டாவில் தனது 199வது டெஸ்டில்(நவ. 6- 10) பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தின் முன்பு சச்சினின் மெகா "கட் அவுட்'கள் வைக்கப்பட்டுள்ளன. 

இவரது சாதனை படங்கள் அடங்கிய அலங்கார வாகனத்தை நேற்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்க பொருளாளர் பிஷ்வரூப் கூறியது:

சச்சினின் 199வது டெஸ்ட் போட்டிக்கான "கவுன்ட்-டவுன்' துவங்கி விட்டது. இவரது சாதனைகளை விளக்கும் சிறப்பு வாகனம் கோல்கட்டா முழுவதும் சுமார் 200 கி.மீ., தூரத்துக்கு உலா வரும். முக்கிய இடங்களில் இவ்வாகனம் நிறுத்தப்படும். 

இதன் மூலம் போட்டியை நேரடியாக காண இயலாத ரசிகர்களும், இவரது மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.

 இவருக்கான சிறப்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். ஈடன் கார்டன் மைதானத்தின் ஒரு பகுதிக்கு இவரது பெயரை வைக்க திட்டமிட்டுள்ளோம். 

எங்களது சங்கத்தில் கவுரவ உறுப்பினர் அந்தஸ்து அளிக்க இருக்கிறோம். கோல்கட்டாவில் உள்ள காளி கோயிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வார் சச்சின். இதையடுத்து காளியின் அருள் பெற்ற சேலை ஒன்றை சச்சின்-அஞ்சலி தம்பதிக்கு வழங்க உள்ளோம். இப்போட்டியை காண பாலிவுட் "சூப்பர் ஸ்டார்' அமிதாப், ஷாருக் கான் உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் வர வாய்ப்பு உள்ளது.

சச்சின் களமிறங்கும் போது வானில் இருந்து விமானம் மூலம் 199 ரோஜா இதழ்கள் தூவப்பட உள்ளன. பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிஷ்வரூப் கூறினார்.

0 comments:

Post a Comment