அசத்துமா சென்னை கிங்ஸ் - இன்று டைட்டன்ஸ் அணியுடன் மோதல்



சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் இன்று டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் தோனி, முதல் வெற்றியை பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. 

"பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தோனியின் சென்னை அணி, தென் ஆப்ரிக்காவின் டைட்டன்சை எதிர்கொள்கிறது. 

முதல் "டுவென்டி-20': சென்னை அணிக்கு இம்முறை சொந்தமண்ணாக ராஞ்சி மைதானம் உள்ளது. வழக்கமாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்க வேண்டிய போட்டிகள், மைதான அனுமதி, இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் போன்ற பல காரணங்களால் இம்முறை ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இது, கேப்டன் தோனியின் சொந்த ஊர் என்பதால், ரசிகர்கள் உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்காது. 

சபாஷ் ஹசி: சென்னை அணிக்கு மீண்டும் மைக்கேல் ஹசி நல்ல துவக்கம் தரலாம். கடந்த பிரிமியர் தொடரில் ஒட்டுமொத்த அளவில் அதிக ரன்கள் (733) குவித்த இவர், தனது அதிரடியை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் துவக்க வீரராக வரும் முரளி விஜய், இம்முறை சுதாரித்துக் கொள்ள வேண்டும். 

"மிடில் ஆர்டரில்' ரெய்னாவும், கேப்டன் தோனியும் கைகொடுக்கலாம். பின் வரிசையில் அசத்த ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளனர்.

"சுழல்' கூட்டணி: பவுலிங்கை பொறுத்தவரை பிரிமியர் தொடரில் 28 விக்கெட் சாய்த்த, அஷ்வின் (15)-ரவிந்திர ஜடேஜா (15) கூட்டணி மீண்டும் மிரட்டலாம். வேகத்துக்கு இளம் வீரர் மோகித் சர்மா மற்றும் பிரிமியர் போட்டிகளில் அதிக விக்கெட் (32) வீழ்த்திய "ஆல் ரவுண்டர்' டுவைன் பிராவோ உள்ளது கூடுதல் பலம்.

பேட்டிங் பலம்: தென் ஆப்ரிக்காவின் டைட்டன்ஸ் அணி வலுவானது தான். உள்ளூரில் நடந்த ராம் ஸ்லாம் தொடரில் கோப்பை நழுவவிட்ட ஏமாற்றத்தில் உள்ளது. இத்தொடரில் அதிக ரன் சேர்த்த கேப்டன் டேவிட்ஸ் (209), இம்முறை சாதாரண வீரராக விளையாடுகிறார். 

கேப்டனாக ஜார்ஸ்வெல்டு களமிறங்குகிறார். பெகர்டியன் (208), "ஆல்-ரவுண்டர்' வான் டர் மெர்வி (208), ருடால்ப் சுதாரித்துக் கொண்டால், சென்னை அணிக்கு சிக்கலாகி விடும். 

தாமஸ் வேகம்: பவுலிங்கில் அல்போன்சா தாமஸ் , மார்னே மார்கலை தான் பெரிதும் நம்பியுள்ளது. மற்றொரு வீரர் ஆல்பி மார்கல், இம்முறை சென்னை அணிக்காக விளையாடுகிறார். சுழலில் வான் டர் மெர்வி கைகொடுக்கலாம்.

இத்தொடரில் நான்கு லீக் போட்டிகள் தான். இதனால் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

0 comments:

Post a Comment