சாம்பியன்ஸ் லீக் தொடருடன் விடைபெறும் சச்சின், டிராவிட்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது. 
ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இந்தியா சார்பில் பிரிமியர் தொடர் "நடப்பு சாம்பியன்' மும்பை, சென்னை, ராஜஸ்தான், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

கடைசி தொடர்: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், டெஸ்டில் பங்கேற்று வருகிறார். பிரிமியர் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். 

டிராவிட்டை பொறுத்தவரை, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டார். பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக உள்ளார். இருவரும் தற்போதைய சாம்பியன்ஸ் லீக் தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக விடைபெற உள்ளனர். 

இத்தொடருக்குப் பின் சச்சின், டிராவிட்டை வண்ண சீருடையில், மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 இடம், 4 அணி:  இத்தொடரில் பங்கேற்கும் மேலும் 2 அணிகளை தேர்வு செய்ய, இன்று முதல் 20ம் தேதி வரை தகுதி போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் உல்வ்ஸ் என, 4 அணிகள் விளையாடுகின்றன. 

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில், முதல் இரு இடங்களை பெறும் அணிகள், செப்., 21ல் துவங்கும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும். 

தவானுக்கு சோதனை: இன்று இரவு நடக்கும் போட்டியில் ஐதராபாத், கண்டுரட்டா (இலங்கை) அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணியின் "ரெகுலர்' கேப்டன் சங்ககரா, இத்தொடரில் கண்டுரட்டா அணிக்கு எதிராக விளையாடுகிறார். 

இதனால், கேப்டன் பொறுப்பு ஷிகர் தவானிடம் வர, இவருக்கு கூடுதல் "சுமை' ஏற்பட்டுள்ளது. மற்றபடி துவக்கவீரர் பார்த்திவ் படேல், தென் ஆப்ரிக்காவின் டுமினி, திசரா பெரேரா நம்பிக்கை தரலாம். 

ஸ்டைன் பலம்: கடந்த பிரிமியர் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டைன், இஷாந்த் சர்மா கூட்டணி அசத்தியது. இது தகுதிச்சுற்றில் தொடரும் பட்சத்தில் வெற்றி எளிதாகும். ஜிம்பாப்வே தொடரில் 18 விக்கெட் வீழ்த்தி மிரட்டிய அமித் மிஸ்ரா, சுழல் "வலை' விரிக்கலாம்.

வலுவான அணி: திரிமான்னே கேப்டனாக உள்ள இலங்கையின் கண்டுரட்டா மரூன்ஸ் அணியில், சங்ககரா, அஜந்தா மெண்டிஸ், ஹெராத், குலசேகரா உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் இருப்பது பெரும் பலம். 

0 comments:

Post a Comment