பாகிஸ்தான் அணிக்கு அவமானம்

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில், "பேட்டிங்கில்' சொதப்பிய பாகிஸ்தான் அணி, "கத்துக்குட்டி' ஜிம்பாப்வே அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. 
ஜிம்பாப்வே சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 294, பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 199 ரன்கள் எடுத்தது. 

நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. 

சடாரா மிரட்டல்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணியின் அத்னன் அக்மல் (20) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய கேப்டன் மிஸ்பா, அரைசதம் அடித்தார். 

இவருக்கு, அப்துர் ரெஹ்மான் (16), சயீத் அஜ்மல் (2), ஜுனைடு கான் (1) ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ரஹாத் அலி (1) "ரன்-அவுட்' ஆனார்.

இரண்டாவது இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. மிஸ்பா (79) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் "வேகத்தில்' மிரட்டிய டென்டாய் சடாரா 5 விக்கெட் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி, தொடரை 1-1 என சமன் செய்தது. 

ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே அணியின் சடாரா வென்றார். தொடர் நாயகன் விருது பாகிஸ்தானின் யூனிஸ் கானுக்கு வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment