இளம் இந்தியா ஹாட்ரிக் வெற்றிஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில், ஷிரேயாஸ் ஐயர் சதம் அடித்து கைகொடுக்க, இளம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், "டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.

முதலிரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விஜய் ஜோல், "பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஷிரேயாஸ் அபாரம்:

இந்திய அணிக்கு அன்குஷ் பெய்ன்ஸ் (20) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய அகில் ஹெர்வாத்கர் (56) நம்பிக்கை தந்தார். கேப்டன் விஜய் ஜோல் (38) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ஷிரேயாஸ் ஐயர், சதம் அடித்தார். 

இவர், 67 பந்தில் 109 ரன்கள் (6 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரிக்கி புய் (66) அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் (9), தீபக் ஹோடா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.


மழை குறுக்கீடு:

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் டாமியன் மார்டிமர் (31) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கெல்வின் ஸ்மித் (74) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த ஜரான் மார்கன் (29) நிலைக்கவில்லை. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், "டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி 30 ஓவரில் 175 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 30 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

0 comments:

Post a Comment