சச்சினை சந்திக்க ஆசை - கேப்டன் டிராவிட்சச்சின் பெரிய வீரர். சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவர் பங்கேற்கும் மும்பை அணியை, அரையிறுதியில் சந்திக்க ஆசையாக உள்ளது,'' என, ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் தெரிவித்தார். 

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர், இந்தியாவில் நாளை துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளுடன், தகுதி சுற்றில் இருந்து முன்னேறிய ஐதராபாத், ஒடாகோ அணிகளும் விளையாடுகின்றன. 

ஜெய்ப்பூரில் நடக்கும் முதல் போட்டியில், டிராவிட்டின் ராஜஸ்தான் அணி, சச்சின் இடம் பெற்றுள்ள மும்பை அணியை சந்திக்கிறது. இருவருமே "சீனியர்கள்' என்பதால், வண்ண சீருடையில் பங்கேற்கும் கடைசித் தொடர் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் கூறியது: 

சச்சின் பெரிய வீரர். இந்திய அணியில் இருவரும் இணைந்தும், மற்ற நேரங்களில் எதிர் எதிராகவும் விளையாடியுள்ளோம். என்னைப் பொறுத்தவரை நாளை நடக்கும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்து இல்லை. 

இதை ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் தான் பார்க்க வேண்டும். இத்தொடரின் அரையிறுதியில் நாங்கள் மோத வேண்டும் என்று விரும்புகிறேன். 


முடிவு இல்லை:

இது தான் எனது கடைசி "டுவென்டி-20' தொடர் என்று பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதைய நிலையில், சாம்பியன்ஸ் லீக் தொடரில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன். 

அசோக் மனேரியா கடந்த முறை சிறப்பாக விளையாடவில்லை. வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடர் மற்றும் இந்தியா "ஏ' போட்டிகளில் தற்போது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருக்கு சில ஓவர்கள் பவுலிங் செய்யவும், பேட்டிங்கில் அதிக வாய்ப்பும் கிடைக்கும் என, நம்புகிறேன். 

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை பெற்ற, சித்தார்த் திரிவேதிக்கு பதில் யாரை சேர்ப்பது என சிந்தித்து வருகிறோம். சர்ச்சையில் இருந்து விடுபட்ட ஹர்மீத் சிங், சில நாட்களுக்கு முன் அணியுடன் இணைந்து, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரை சேர்ப்பது பற்றி அணி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். 


நன்றாக உள்ளது:

ஸ்ரீசாந்த், அங்கித் சவான் விஷயத்தை பொறுத்தவரை, எங்களை விட விசாரணை குழுவுக்கு நன்கு தெரியும். சம்பந்தப்பட்ட வீரர்கள் இல்லாமல், இதற்கு முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதை மீண்டும் தொடர்வோம்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment