நேபாள கிரிக்கெட்டில் சேவக் படத்தால் கிளம்பிய சர்ச்சைநேபாள கிரிக்கெட் சங்க (சி.ஏ.என்.,) ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் சேவக் படத்தை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சி.ஏ.என்., சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது. இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் அக்கறை செலுத்தவில்லை. 

இதன் காரணமாக அட்டை படத்திலேயே தவறு நடந்தது. நேபாள அணியின் சீருடையில் இந்திய வீரர் சேவக்கின் "ஆக்ஷன்' படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. 

இதில் சேவக் முகம் லேசாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சேவக் தான் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால், உள்ளூர் நேபாள வீரர்கள் கொதிப்படைந்தனர். 

முன்னாள் வீரர் ராஜூ பஸ்னயாத் கூறுகையில்,""நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் தங்கள் நாட்டு வீரர்களை புறக்கணித்தது பெரும் அவமானம்,''என்றார். 

இதனை மறுத்த சி.ஏ.என்., தலைமை கமிட்டி உறுப்பினர் கிரன் ராணா கூறியது:
அட்டையில் உள்ளது சேவக் படம் தான். நன்கு கூர்ந்து கவனித்தால், இவரது முகம் லேசாக மறைக்கப்பட்டு இருக்கும். 

வேண்டுமேன்றே இதை செய்யவில்லை. முழுவதும் எங்கள் தரப்பில் நடந்த தவறு தான். 

சேவக்கிற்கு நேபாளத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதை அச்சிட்ட உரிமையாளர் கூட சேவக் ரசிகராக இருந்திருக்கலாம். உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்துள்ளார். 


விற்பனை இல்லை:

இந்த ஆண்டு மலரை நாங்கள் விற்கவில்லை. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 150 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதால், சேவக் படத்தை மாற்றிவிட்டு, மீண்டும் அச்சிடும் வாய்ப்பு இல்லை. 

தவிர, சி.ஏ.என்.,க்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.சி.ஐ.,) நல்ல நட்புறவு உள்ளது. தனது மனைவி சாக்ஷியுடன் நேபாளம் வந்த இந்திய கேப்டன் தோனி, பசுபதிநாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார். 

இவரை, நேபாள கிரிக்கெட்டின் தூதராக கடந்த ஆண்டு நியமித்தோம். இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். 

இவ்வாறு கிரன் ராணா கூறினார்.

0 comments:

Post a Comment