விஸ்வரூபம் எடுப்பாரா விராத் கோஹ்லி?


இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேனான இவர், இதுவரை 14 டெஸ்ட் (891 ரன்கள்), 98 ஒருநாள் (4054 ரன்கள்), 20 சர்வதேச "டுவென்டி-20' (558 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

இவருக்கு கடந்த ஆண்டு ராசியானதாக அமைந்தது. 17 ஒருநாள் போட்டியில் 5 சதம், 3 அரைசதம் உட்பட 1026 ரன்கள் எடுத்த இவர், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 

தவிர, சர்வதேச அளவில் மூன்றாவது இடம் பிடித்தார். இதேபோல டெஸ்ட் (9 போட்டி, 689 ரன்கள்), சர்வதேச "டுவென்டி-20' (14 போட்டி, 471 ரன்கள்) போட்டிகளிலும் ரன் மழை பொழிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஆனால் இந்த ஆண்டு, இவருக்கு மிகவும் மோசமாக துவங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 7 ஒருநாள் போட்டியில், ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்த இவர், 168 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொதப்பிய இவர் (0, 6, 7 ரன்கள்), இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த போட்டியில் மட்டும் 77 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் (15, 37, 26, 0 ரன்கள்) வெளியேறி ஏமாற்றினார்.

"பார்மின்றி' தவிக்கும் இவர், விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் மழை பொழியலாம்.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில், ""நான் ஒரு சாதனையாளராக மாற விரும்புகிறேன். 

இதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இழந்த "பார்மை' மீட்டு, இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுத் தருவதே இலக்கு,'' என்றார்.

0 comments:

Post a Comment