சச்சின் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்


சச்சின் போன்ற மகத்தான வீரர்கள் ஓய்வு பெற்றால், டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடும்,'' என, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா தெரிவித்தார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்தவர். தற்போது நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து 1996ல் இலங்கை அணிக்கு உலக கோப்பை வென்று தந்த ரணதுங்கா கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கல்வி கற்பது போன்றது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் என்பது பொழுது போக்கானது. பொழுது போக்கான போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றது மகிழ்ச்சி. 

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என, இவர் முடிவு செய்தால் இப்போட்டியே அழிந்து விடும். சச்சினுக்கு, ஏதாவது ஒரு போட்டி சிறப்பாக அமைந்து விட்டால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித தொல்லையும் இல்லாமல் தொடர்வார். இதனால், சச்சின் தொடர்ந்து டெஸ்டில் விளையாடத் தேவையான திறனை கொடுக்கும் படி இறைவனிடம் கேட்டுக் கொள்வேன். 

டி.ஆர்.எஸ்., வேண்டும்:

அம்பயர் தீர்ப்பில் ஏற்படும் தவறுகளை சரிசெய்வது எப்படி என, கடந்த 20 ஆண்டுகளாக குழப்பமாக இருந்தது. இப்போது வந்துள்ள அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை (டி.ஆர்.எஸ்.,) சிறப்பானது. 

பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் பீல்டர் என, அனைவருக்கும் இது சாதகமானது. இதை அனைத்து நாடுகளிலும் கட்டாயம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்க மறுக்கிறது. இதற்காக, பி.சி.சி.ஐ.,யை குற்றம் சொல்லவில்லை. 

யார் தவறு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) மீது தான் தவறு உள்ளது. டி.ஆர்.எஸ்., விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை, தொடரை நடத்தும் அணியின் கையில் கொடுத்திருக்கக் கூடாது. கிரிக்கெட்டை மட்டும் தான் காப்பாற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒரு நாட்டினை மட்டும் பாதுகாக்க ஐ.சி.சி., முயற்சிக்கக் கூடாது. 

தேசம் முக்கியமல்ல:

தவிர, "டுவென்டி-20' போட்டிகளில் தேசம் முக்கியமல்ல, பணத்துக்காக மட்டும் தான் விளையாடப்படுகிறது. இதனால், கவாஸ்கர், சச்சின், அசார், டிராவிட், கங்குலி மற்றும் லட்சுமண் போன்ற சிறந்த வீரர்கள் உருவாக முடிவதில்லை. 

இப்போதுள்ள வீரர்கள் தொழில்நுட்ப ரீதியாக என்பதை விட, அடித்து விளையாடுவதில் தான் ஆர்வமாக உள்ளனர். இப்படி இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. இந்திய அணியை பொறுத்தவரையில் அதிகமான அதிரடி வீரர்கள் உள்ளனர். இவர்கள் தொழில்நுட்ப முறையில் கவனம் செலுத்த வேண்டும். 

இதை ஆஸ்திரேலிய தொடரில் செயல்படுத்தினால், அந்த அணியை எளிதாக வீழ்த்தலாம். இப்போதுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டனாக தோனி தொடர்வது தான் நல்லது.

இவ்வாறு ரணதுங்கா கூறினார்.

0 comments:

Post a Comment