இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி போட்டி "டிரா' ஆனது. இந்தியா "ஏ' சார்பில் "சுழலில்' சக்சேனா, துருவ் அசத்தினர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.
இதற்கு முன், சென்னையில் நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் (மூன்று நாள்) இந்தியா "ஏ', ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஹென்ரிக்ஸ் 33 ரன்களில் வெளியேறினார். பீட்டர் சிடில் (2), ரன்-அவுட்டானார்.
வேட் 44 ரன்களுக்கு துருவ் பந்துவீச்சில் அவுட்டானார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ ஆன்' பெற்றது. இந்தியா "ஏ' அணி சார்பில் சக்சேனா 4, ராகேஷ் துருவ் 4 விக்கெட்கள் கைப்பற்றினர்.
வாட்சன் அரைசதம்:
216 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இம்முறையும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த வாட்சன் பவுண்டரிகளாக விளாசினார்.
இவருக்கு எட் கோவன் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த போது வாட்சன் (60) அவுட்டானார். அரை சதம் கடந்த எட் கோவன் (53), சக்சேனா பந்தில் வீழ்ந்தார்.
ஹியுஸ் (19) நீடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுக்க, போட்டி "டிரா' ஆனது. கவாஜா (30), வேட் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
0 comments:
Post a Comment