காம்பீர் நீக்கத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள்  தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:- 

இந்திய அணியில் இருந்து காம்பீர் நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலிய வீரர்களை எதிர்கொள்வதில் அவர் கெட்டிக்காரர். 

ஆஸ்திரேலிய அணியில் மைக் ஹஸ்சி இல்லாதது எப்படி இழப்போ? அது மாதிரி தான் காம்பீர் இல்லாதது இந்தியாவுக்கு பாதிப்பே. 

ஹர்பஜன்சிங் மீண்டும் தேர்வாகி இருப்பது இந்திய அணிக்கு சிறப்பானதே. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்துவார். டிராவிட், லட்சுமண் ஓய்வால் ஆஸ்திரேலிய அணி நிம்மதி அடைந்து இருக்கும். இருவரும் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் ஆடிய அபாரமான ஆட்டத்தை யாராலும் மறக்க இயலாது. 

ஆஸ்திரேலிய அணியில் தலைசிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரை நம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். கேப்டன் கிளார்க்குக்கு இந்த டெஸ்ட் தொடர் கூடுதல் நெருக்கடியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அவர் இந்தியாவுக்கு எதிராகத் தான் அறிமுகம்  ஆனார். கடந்த சில ஆண்டுகளாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. 

நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு நன்றாக தெரியும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சுழற்பந்து வீரர்கள் சுவான், பனேசர் சிறப்பாக செயல்பட்டார்கள். 

அது மாதிரியாக சிறந்த சுழற்பந்து ஆஸ்திரேலிய அணியில் இல்லை. ஆனால் வேகப்பந்து வீச்சு சமபலம் வாய்ந்ததாக உள்ளது. பீட்டர் சிடில், பேட்டின்சன், மைக்கேல் ஸ்டார்க் ஆகியோர் சிறந்த வேகப்பந்து வீரர்கள் ஆவார்கள். 

இவ்வாறு ஹைடன் கூறியுள்ளார். 

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் வர்ணனையாளராக ஹைடன் பணியாற்றுகிறார். 3-வது மற்றும் 4-வது டெஸ்டுக்கு வர்ணனையாளராக செயல்படுகிறார். 

2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது ஹைடனின் ஆட்டத்தை மறந்து இருக்க முடியாது. அவர் அந்த தொடரில் 2 சதம் அடித்தார். அதுவும் சென்னையில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார்.

0 comments:

Post a Comment