ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், சச்சின், விராத் கோஹ்லி அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. கிளார்க் (103), சிடில் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் கிளார்க் 130 ரன்களில், ஜடேஜாவிடம் சரணடைந்தார். சிடில் (19), 100வது டெஸ்டில் பங்கேற்கும் ஹர்பஜன் "சுழலில்' சிக்கினார்.
அடுத்து வந்த லியான் (3) ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. பட்டின்சன் (15) அவுட்டாகாமல் இருந்தார்.
இந்திய அணிக்கு அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 2, ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணிக்கு சேவக், முரளி விஜய் ஜோடி துவக்கம் அளித்தது. வேகத்தில் மிரட்டிய பட்டின்சன் முதலில், முரளி விஜயை (10) "போல்டாக்கினார்'. பின் பட்டின்சன் வீசிய போட்டியின் 6வது ஓவரின் 2வது பந்தை சேவக் சந்தித்தார்.
பந்து "பேட்டில்' பட்டு "ஸ்டம்ப்பை' நோக்கி போனது. இதை சேவக் தடுக்க தவறியதால் பந்து "பைல்சில்' பட சேவக் பரிதாபமாக வெளியேறினார்.
அடுத்து வந்த அனுபவ வீரர் சச்சின், வந்த வேகத்தில் மூன்று பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த புஜாரா அவ்வப்போது பவுண்டரி அடித்தார். இவர் 44 ரன்களில் பட்டின்சனிடம் சரணடைந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், டெஸ்ட் அரங்கில் 67வது அரைசதம் கடந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரைசதம் கடந்தார்.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (50), சச்சின் (71) அவுட்டாகாமல் இருந்தனர்.
0 comments:
Post a Comment