ஐ.பி.எல்., தொடரில் சர்ச்சை கிளப்பிய பெண்கள்


 ஐ.பி.எல்., தொடரில் எழுந்த பெரும்பாலான சர்ச்சைகளுக்கு பெண்கள் தான் காரணமாக இருந்துள்ளனர். 

கடந்த 2008ல் முதன் முதலாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மூலம் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) துவக்கப்பட்டது. இதன் சார்பில் "டுவென்டி-20' போட்டிகள் வெற்றிகரமாக நடந்தன. இருப்பினும் முதல் தொடரில் இருந்து பெண்களால் தொல்லை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அவற்றில் சிலவற்றை காணலாம்.

நடன பெண்கள்: போட்டிகளின் போது வீரர்கள் பவுண்டரி, சிக்சர்கள் அடிக்கும் போது, மைதானத்துக்கு வெளியே ரசிகர்களை குஷிப்படுத்த, நடனப் பெண்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களது உடை, அங்க அசைவுகள் ஆபாசமாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனால், போகப் போக "அடக்கி' வாசித்தனர்.

சுனந்தா புரஸ்கர்: கடந்த 2010ல் கொச்சி அணி உரிமையாளர்கள் யார் என்பதில் சர்ச்சை வெடித்தது. மத்திய இணை அமைச்சர் சசி தரூர், தனது காதலி சுனந்தா புரஸ்கருக்கு கொச்சி ஐ.பி.எல்., அணியை வாங்கி கொடுத்தார் என, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி குற்றம் சுமத்தினார்.

இப்பிரச்னையில் லலித் மோடி, சசி தரூரின் பதவி பறிபோனது. 

பூர்ணா படேல்: 2010ல் மத்திய விமானத்துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேலின் மகள் பூர்ணா படேல். ஐ.பி.எல்., விருந்தோம்பல் பிரிவு மானேஜராக இருந்த இவர், தந்தையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விமானங்களை வேறுவழியில் செல்ல உத்தரவிட்டார். அதாவது, ஐ.பி.எல்., வீரர்களின் வசதிக்கு ஏற்ப, விமான போக்குவரத்தையே மாற்றி அமைத்தார்.

லைலா மகமூது: ஐ.பி.எல்., அணிகளின் வருமானம் குறித்து மத்திய வருமான வரித்துறை 2010ல் விசாரணையை துவங்கியது. அப்போது, லலித் மோடியின் அலுவலகத்தில் "ரெய்டு' நடப்பதற்கு சற்று முன், அங்கிருந்து "லாப்டாப்' மற்றும் சில பைல்களுடன், சந்தேகத்துக்கு இடமாக ஒரு பெண் வெளியேறியது, சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. கடைசியில் இந்த பெண், பெங்களூரு அணி உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகள் என்று தெரிந்தது.

கேபிரியல்லா: மும்பை அணிக்காக நடனமாட வந்த பெண் தென் ஆப்ரிக்காவின் கேபிரியல்லா. போட்டிகளுக்குப் பின் நடக்கும் "பார்ட்டிகளின்' போது, வீரர்கள் மோசமாக நடந்து கொள்வதாக தெரிவிக்க, தென் ஆப்ரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பிரித்தி - ஷில்பா: பஞ்சாப், ராஜஸ்தான் அணி உரிமையாளர்களாக பாலிவுட் நடிகைகள் பிரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி உள்ளனர். இவர்கள் உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை மீறியதாக பி.சி.சி.ஐ., குற்றம் சுமத்தியது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர்.

ஐந்தாவது தொடரின் போது கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஸ், சர்ச்சைக்குரிய முறையில் "அவுட்டானார்'. இதை, மைதானத்துக்கு வெளியில் இருந்த பிரித்தி ஜிந்தா கடுமையாக எதிர்த்தார். பின் போட்டி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சர்ச்சை ஏற்படுத்தினார்.

சோகல் ஹமீது: கடந்த மே 17ல் பெங்களூரு வீரர் பாமர்ஸ்பச், டில்லி ஓட்டலில் அமெரிக்க பெண் சோகல் ஹமீதுக்கு "செக்ஸ்' தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். பின் இருவரும் சமாதானமாக வழக்கு வாபஸ் ஆனது.

சோபியா ஹயாத்: புனே அணியின் ராகுல் சர்மா, பார்னல் உட்பட 96 பேர், கடந்த மே 20ல் மும்பையில் நடந்த "போதை பார்ட்டியில்' பங்கேற்று சிக்கினர். இதில் மாடல் மற்றும் நடிகையான சோபியா ஹயாத் மற்றும் நம்ரதா குமார் என, இரு பெண்களுடன் 6 ஐ.பி.எல்., நடன பெண்களும் சிக்கியது, தொடரின் "இமேஜை' களங்கப்படுத்தியது.

வரும் ஏப்., 3ல் துவங்கும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரிலாவது இது போன்ற பிரச்னைகள் எழாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.

0 comments:

Post a Comment