இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து


ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, 117 புள்ளிகளுடன் "நம்பர்-2' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (116 புள்ளி), தென் ஆப்ரிக்கா (112), இலங்கை (110), பாகிஸ்தான் (107) அணிகள் உள்ளன.

இப்பட்டியலில், முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு தென் ஆப்ரிக்க அணிக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் துவங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க அணி 120 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம். இதன்மூலம் ஏப்., 1ம் தேதி வெளியிடப்பட உள்ள ஐ.சி.சி., ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து, ஒருநாள் போட்டி சாம்பியன்ஷிப் விருதுடன் பரிசு பெறலாம். இந்திய அணி, 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி 4-1 என தொடரை வெல்லும் பட்சத்தில், 117 புள்ளிகளுடன் 2வது இடத்தை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொள்ளும். தசமபுள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு 2வது இடம் கிடைக்கும்.

ஆம்லா முதலிடம்:

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ் முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். அடுத்த இரு இடங்களை இந்தியாவின் விராத் கோஹ்லி, கேப்டன் தோனி தக்கவைத்துக் கொண்டனர். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்தில் உள்ளார்.

அஷ்வின் முன்னேற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ஒரு இடம் முன்னேறி, 13வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன், நியூசிலாந்தின் மில்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மற்றொரு இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, 9வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீன் அஜ்மல், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் உள்ளனர்.

ஹபீஸ் "நம்பர்-1':

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த நான்கு இடங்களை வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், இலங்கையின் மாத்யூஸ், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைத்துக் கொண்டனர்.

0 comments:

Post a Comment