ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுப்படுத்த இந்தியா உதவி


தீவிரவாதிகளுக்கு எதிரான போரால் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண கவனம் செலுத்தி வருகிறது. 

இதில் ஒரு அங்கமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை பலமிக்கதாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி உருவாக்கப்பட்டு உலக கோப்பையில் பங்கேற்றது. 

அவர்கள் அனைவரும் 19 வயதைக் கடந்து விட்டதால் 20 வீரர்கள் கொண்ட புதிய அணியை உருவாக்கியுள்ளது. மலேசியாவில் வருகிற மே 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏசியன் கிரிக்கெட் கவுன்சில் கோப்பைக்கான போட்டி நடக்கிறது. இதில் இடம்பெற ஆப்கானிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இதில் சிறப்பாக விளையாடினால்தான் உலக கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெறமுடியும். இதையடுத்து அணியை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலப்படுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உதவியை நாடியுள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மும்பை வந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் ஆப்கானிஸ்தான் அணியை பலப்படுத்த தேவையான உதவிகளை இந்தியாவிடம் முறைப்படி கோரப்பட்டது. 

கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய சவுரவ செயலாளர் சஞ்சய் ஜக்டேல், பொது மேலாளர் ரத்னானர் ஷெட்டி ஆகியோரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் அதன் சேர்மன் ஷகாஸதா மசூத் திட்ட மேலாளர் பஷீர் ஸ்டானெக்ஸாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment