கனவு இல்லத்தில் குடியேறினார் சச்சின்

மும்பையில் தனது சொந்த வீட்டில் குடியேறினார் சச்சின். 5 மாடிகள் கொண்ட இந்த சொகுசு மாளிகையில் விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த 2007ல் ரூ. 39 கோடிக்கு மும்பை புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பழைய மாளிகை ஒன்றை வாங்கினார்.

6 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த விசாலமான இடத்தில், ரூ. 50 கோடி செலவில் புதிய வீடு கட்டினார். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று முறைப்படி குடியேறினார்.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். இந்தக் கனவும் எனக்கும் இருந்தது. இதனை நனவாக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. முன்பு வசித்த வீடு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கிடைத்தது. தற்போது காலி செய்து விட்டேன். இதன் மூலம் வேறு ஒரு வீரர் இங்கு தங்க முடியும்.

இங்கிலாந்து தொடருக்கு முன், புது வீட்டுக்கான "கிரஹ சாந்தி', "வாஸ்து பூஜா' போன்றவற்றை கடந்த ஜூன் 11ம் தேதி செய்தோம். இதற்கு பின் மும்பைக்கு வர இயலவில்லை. தற்போது இங்கு இருப்பதால், எனது அம்மாவை அழைத்து வந்து வீட்டை காண்பித்தேன்,''என்றார்.

ஒரே தளத்தில் 41 கார்கள்...

சச்சின் வீடு ஐந்து மாடிகள் கொண்டது. முழுவதும் "ஏசி' வசதி செய்யப்பட்டது. வெளியில் இருந்து பார்த்தால் மூன்று மாடிகள் மட்டும் தெரியும் வகையில் "காம்பவுண்டு' சுவர் நல்ல உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. நவீன "சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* தரை தளத்தில் சச்சினுக்கு பிடித்த விநாயர் கோயில் உள்ளது. தவிர இவர் பெற்ற ஏராளமான விருதுகளை வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. "டைனிங்' அறையும் உள்ளது.

* முதல் தளத்தில் வேலையாட்களின் அறை, கண்காணிப்பு அறைகள் உள்ளன.

* இரண்டாம் தளம் முழுவதும் சச்சின் வாங்கி குவித்துள்ள கார்கள் "பார்க்கிங்' செய்யப்பட உள்ளன. இங்கு இவரது 41 கார்கள் நிறுத்தப்பட உள்ளன.

* மீதமுள்ள 3 தளங்களில் சச்சின், அவரது மகன் அர்ஜுன், மகள் சாரா உள்ளிட்ட குடும்பத்தினர் தங்க உள்ளனர். ஐந்தாவது தளத்தில் சச்சின், அவரது மனைவி அஞ்சலிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு "யு.எப்.ஒ., கிளப்' சார்பில் 25 பேர் அமர்ந்து சினிமா பார்க்கும் வகையில்
"மினி-தியேட்டர்' அமைக்கப்பட்டுள்ளது.

* மொட்டை மாடியில் நீச்சல் குளம் உள்ளது.

சிறுவர்கள் காயம்

நேற்று புது வீட்டுக்கு வந்த சச்சினை காண அந்தப் பகுதியில் இருந்த 5 முதல் 8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திரண்டனர். ஏராளமான "மீடியா' குழுவினரும் குவிந்தனர். சச்சின் வந்ததும்
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

* சச்சின் வீட்டின் எதிரே, அவரை வரவேற்று பெரிய "பேனர்' வைக்க முற்பட்டனர். இதற்கு "அவாமி' நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சர்ச்சை ஏற்பட்டது. பின் சுமுக ஏற்பட, "பேனர்' வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment